சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, பிரசாத் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பிரசாத் ‘தீங்கிரை’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். இதனால் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு கொக்கைன் என்ற போதைப் பொருளை அடிக்கடி பிரசாத் வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்தது.தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள பிரசாத் வீட்டில் நடந்த சோதனையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக பல முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்படி பிரசாத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்ற பிரடோ (வயது 38) மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த ஜான் (வயது 38) என்பவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 17ம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் அறிமுகம் செய்து வைத்த பிரதீப்குமார் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2023ம் ஆண்டு முதல் 40 முறை அதாவது ரூ.4.72 லட்சத்திற்கு கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.அவர் முன்னணி நடிகர் என்பதால் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் போலீசார் ஸ்ரீகாந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர் 12 மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் ஸ்ரீகாந்தை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 14வது மாஜிஸ்திரேட் தயாளன் முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் தயாளன் நடிகர் ஸ்ரீகாந்தை வரும் ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்த அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்துறையினர் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் கேரளாவுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு,கேரளா,கர்நாடகா,ஆந்திராவுக்கும் போலீசார் சென்றுள்ளனர் இந்நிலையில் தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை தேடி பிடித்துள்ளனர். அவரிடம் ரகசிய இடத்தில் துருவி துருவி விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை மேற்மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா (கொகைன்) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசாரால் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.