நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் , கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்த பின்னர், சில குறும்படங்களை இயக்கினார். இதையடுத்து அவரை சினிமாவில் நடிகராக்க வேண்டும் என ஆசைப்பட்டார் விஜய். ஆனால்,சஞ்சய்க்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் அவர் தனக்கு பிடித்த இயக்கத்தை தேர்வு செய்தார். அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த ஆகஸ்ட் 2023 இல் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வேறு எந்த தகவல்களும் வெளியாகாத நிலையில்,தற்போது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சினிமா தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். ஜேசன் சஞ்சய் ,டொராண்டோ திரைப்படப் பள்ளியில், திரைப்பட தயாரிப்பு டிப்ளோமா படிப்பை முடித்து, அதைத் தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுத்தில், இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.