ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், 96 படத்தில் ராம் – ஜானுவாக நடித்த இளம்ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,இவர்களுடன் கிங்ஸ்லி, டி.எஸ்.ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குநர் சாய் ரமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்துமுடிந்துள்ள நிலையில், தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரவுள்ளது.இப்படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி, “இந்த உலகில் காதலும், அன்பும் அதன் இயல்பு தன்மை மாறாமல் இருப்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், காதலின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது. சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்ஸாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளாமல், கற்றுக் கொடுக்கப்படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. அலட்டிக் கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன். குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை” என்கிறார்.