மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக தனஞ்செயன் சார் படத்தை விநியோகம் செய்கிறார். இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தார். தேஜூ அஸ்வினி, ரமேஷ் திலக், வேட்டை முத்துக்குமார், பிந்து மாதவி என நடிகர்கள் அனைவரும் சரியான நேரத்தில் நல்லபடியாக படத்தை முடித்துக் கொடுத்தனர். இயக்குநர் மாறன், கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் ‘ஒத்துக்கறியா…’ பாடலை இசையமைத்துக் கொடுத்த இமான் மற்றும் சாம்.சி.எஸ். இருவருக்கும் நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், “இந்த படத்தின் வாய்ப்பு ஜிவி பிரகாஷ் சார் மூலம்தான் வந்தது. தயாரிப்பாளர் ரொம்பவே வெள்ளந்தியானவர். அவருக்கு இந்தப் படம் மூலம் நல்லது நடக்க வேண்டும். கண்டிப்பாக உங்கள் ஆதரவு தேவை. படத்தின் நடிகர்கள் எல்லாரும் நண்பர்களாக பழகினார்கள். இயக்குநர் மற்றும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் ரமேஷ் திலக், “தயாரிப்பாளரின் நல்ல மனதுக்கு படம் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் மாறன் பழகுவதற்கு ரொம்பவே தன்மையானவர். தேஜூவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஜிவி பிரகாஷூடன் முதல் முறை பணிபுரிகிறேன். நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்தப் படம் வெளியாகிறது. உங்கள் ஆதரவு தேவை”.
இயக்குநர் விஜய், “தயாரிப்பாளர் அமல்ராஜூக்கு வாழ்த்துக்கள். தனஞ்செயன் சார் இந்தப் படத்தை தன்னுடைய படமாக எடுத்து செல்வார். அவருக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். நான் ‘சைவம்’ படம் எடுத்தபோது எனக்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்தார் ஜிவி. எனக்கும் அவருக்கும் 20 வருட நட்பு உள்ளது. எனது கரியரில் ஜிவி மிகப்பெரிய சப்போர்ட் கொடுத்திருக்கிறார். நடிகர், இசையமைப்பாளராக அவரது வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.
அம்மா கிரியேஷன்ஸ், டி. சிவா, “படக்குழுவினர் அனைவருமே ஆத்மார்த்தமாக தயாரிப்பாளருக்காக பேசினார்கள். இவ்வளவு பேரின் வாழ்த்து நிச்சயம் அவருக்கு லாபகரமானதாக மாறும். தனஞ்செயன் சாருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். புது இயக்குநர்களுக்கு அதிக படம் செய்து கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். பேரம் பேசாமல் போதும் என்ற மனதோடு இசையும் அமைத்து கொடுப்பார் படங்களும் நடிப்பார். அவர் இன்னும் பெரிதாக சாதிக்க ஆசை. ரமேஷ் திலக்கின் பெரிய ரசிகன் நான். எம்.எஸ். பாஸ்கர் போலவே ரமேஷ் திலக்கும் தேசிய விருது பெற வேண்டும். தேஜூவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் மு. மாறன், “தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது. இவரைப் போல ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். இந்தப் படம் வெற்றியடைந்து அவர் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் தனஞ்செயன் சார் மாதிரியான ஒருத்தர் கைக்கொடுத்தது பெரிய விஷயம். சரியான படங்களையும் திறமையாளர்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவார். அவர் எங்கள் படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. படக்குழுவினர் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. ஜிவி பிரகாஷ் சாருடன் அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.
எக்ஸிகியூடிவ் புரொடியூசர் தயாளன் பழனி, “தனஞ்செயன் சாரை நம்பி நாங்கள் படத்தை ஒப்படைத்து விட்டோம். அனைவருக்கும் நன்றி”.