இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், மனோபாலா, பார்த்திபன், சேரன், சமுத்திரக்கனி, செல்வமணி, நடிகைகள் அம்பிகா, ராதா, ரேகா என்று பல முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும்போது, “நான் முதல்ல பாரதிராஜாவை ‘பாரதி வாசு’ன்னுதான் கூப்பிடுவேன். அப்புறம் ஒரு நாள் இளையராஜா, பாரதிராஜாவோட வயதைச் சொன்னார். அதுக்கப்புறம் பாரதிராஜாவை ‘ஸார்’ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். இப்போ அவரோட உண்மையான வயசைச் சொன்னா, எல்லாரும் சாஷ்டாங்கமா அவர் கால்ல விழுகணும்.
பாரதிராஜா ஸாரை எனக்குப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனா பிடிக்காது. ஒரு பேட்டில படிச்சிருக்கேன்.. ‘ரஜினியை பத்தி உங்க கருத்து என்ன..?’ என்று அவர்கிட்ட கேட்டிருக்காங்க. ‘அவர் நல்ல நடிகர்.. இல்லை.. குட் மேன்.. நல்ல மனுசன்’னு சொல்லியிருக்காரு.
என்னை எப்போ பார்த்தாலும் ‘எப்படிய்யா?’ன்னு ஆச்சரியமா கேப்பாரு. ‘எப்படிய்யா உன்னை ஏத்துக்கிட்டாங்க?’ன்னு கேப்பாரு..! நான் நல்ல நடிகன்னு அவர் என்னைக்குமே ஒத்துக்க மாட்டாரு.
அவர்கூட இதுவரைக்கும் இரண்டு படங்கள்லதான் நடிச்சிருக்கேன். ஒண்ணு ‘பதினாறு வயதினிலே’.. அப்போ கால்ஷீட் கேட்டு அவரே வந்தார். இரண்டாவது அவரோட சொந்தப் படம் ‘கொடி பறக்குது’. அப்போ இவர் வரலை. பஞ்சு ஸார்தான் கால்ஷீட் கேட்டு வந்தார். இந்த விழாவுக்குத்தான் அவரே வந்து கூப்பிட்டார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக, மிக நெருக்கமாக இருந்தார். அவரோட கடைசிக் காலத்துல ஏதாவது பிரச்சினை, பேசணும்னு சொன்னா ‘பாரதிராஜவை கூப்பிடுய்யா’ன்னு சொல்லி இவரைக் கூப்பிட்டு மணிக்கணக்கா பேசிக்கிட்டிருப்பாரு. கொஞ்சிக் குலாவுவாறு.
யாரோ சொன்னாங்க.. ஒரு ஹீரோயினைகூட இவர் லவ் பண்ணலைன்னு..! இவர் மனசு கள்ளங் கபடமில்லாத அன்பு.. முரட்டுத்தனமான அன்பு. அதனால்தான் எல்லாரும் இங்க வந்திருக்காங்க.
இந்த விழாவுக்கான இன்விடேஷனைகூட அழகா அடிச்சிருந்தாங்க. அவரே ஒரு பல்கலைக் கழகம்தான். அவருடன் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களும் ஏற்கெனவே அவர்கிட்ட படிச்சுட்டுத்தான் இருந்தாங்க. இப்போ அபீஷியலா ரிஜிஸ்தர் பண்ணி இந்த இண்ஸ்ட்டியூட்டை ஆரம்பிச்சிருக்காரு.
பிலிம் இன்ஸ்டிட்டியூட்ல படிக்கும்போது நிறைய அனுபவங்கள் கிடைக்கும். தவறுகளை தெரிஞ்சுக்கலாம்.. தொடர்புகள் கிடைக்கும். அரசியலுக்கு தகவல்கள்தான் ஆயுதம். அதுதான் முக்கியம். அதே மாதிரி சினிமாவுக்கு தொடர்புகள்தான் முக்கியம். இங்க அது பாரதிராஜாவால கிடைக்கும்.
இண்டஸ்ட்ரில அவருக்குத் தெரியாத ஆட்களே கிடையாது. அவர் மேல அப்படியொரு மதிப்பையும், மரியாதையும் உருவாக்கி வைச்சிருக்காரு. ஸோ, இவர் ஆரம்பிச்சிருக்கிற இந்த இன்ஸ்டிட்டியூட் மிகப் பெரிய அளவுக்கு பல்கலைக் கழகமா மாறி, நல்ல பெயரெடுத்து.. ஒரு முன் மாதிரியா இருக்கணும்ன்னு ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்..” என்றார்.
விழாவில் பாரதிராஜா பேசும்போது, “தென்னக சினிமாக்களில் சிறந்த இயக்குநருக்காக பாரதிராஜா விருது என்ற பெயரில் ஒரு விருதினை வருடந்தோறும் வழங்கப் போவதாக” அறிவித்தார்.