பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரிக்கும் ‘நான் தான் சி.எம்’ என்ற புதிய படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்ட பதிவில், “பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் சி. எம். நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு ‘போட்’ சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, சி. எம் . சிங்காரவேலன் எனும் நான்…. ‘சோத்துக் கட்சி” என்று குறிப்பிட்டிருந்தார்.அப்பதிவில்,”சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பெயரை பயன்படுத்தியிருப்பதும், போட் சின்னம், சோத்துக் கட்சி என்று குறிப்பிட்டிருப்பதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து நடிகர் பார்த்திபன் தனது சமூகவலைதள பதிவில். தனது படத்தில் பயன்படுத்திய பெயர்கள் அனைத்தும் கற்பனை பெயர்களே என்று குறிப்பிட்டுள்ளார்.
சி.எம். பக்கத்தில் rhyming ஆக ‘சி’ இருக்க வேண்டுமென வைத்த பெயரே சிங்காரவேலன் என்றும்,ஆனால் அது மரியாதைமிகு சிங்காரவேலரை குறிப்பிடுவதால் அதை உடனடியாக மாற்ற மனதார சம்மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், போட் என்ற வார்த்தையையும், ‘சோத்துக்கட்சி’ என்ற வார்த்தையையும் படத்தில் இருந்து நீக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். முற்றுகைப் போராட்டம் போன்ற விளம்பரங்கள் தன் படத்திற்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள பார்த்திபன், மீனவ நண்பர்கள் மட்டுமின்றி யார் மனதையும் இந்த சி.எம். சீர்கெட செய்ய மாட்டான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.