தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம், ‘தி ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே, அரங்கில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் புறப்பட்ட போது, நிதி அகர்வாலை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு, அவரைத் தள்ளியும், அநாகரீகமாகத் தொட்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால்,செய்வதறியாது திகைத்த நடிகை நிதி அகர்வாலை அவரது பாதுகாவலர்கள் அந்த கும்பலிடமிருந்து மீட்டு ,உடனடியாக காரில் ஏற்றினர். காரில் ஏறிய நிதி அகர்வால் சிறிது நேரம், முகத்தை மூடிய படி அமர்ந்து கதறினார். “கடவுளே, இதுஎன்ன கொடுமை?” என்று அவர் பதற்றத்துடன் கதறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது மிகவும் மோசமான செயல், என்றும் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா என்றும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை, பொது இடங்களில் நடிகைகளுக்குப் போதுமான பாதுகாப்பு ஏன் வழங்கப்படுவதில்லை? என்ற கேள்வியையும் பலர் கேட்டுள்ளனர். சமீபகாலமாக, பொது நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்த சம்பவம் குறித்து பிரபல பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ்தள பக்கத்தில், “இவர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு பெண்ணை வேட்டையாடும் ஓநாய்கள் போல நடந்து கொள்கிறார்கள்” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.