ரஜினியின் 173 வது பட இயக்குனர்; அறிவிப்பை வெளியிட்ட கமல் பட நிறுவனம்!

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 173′ படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறி விட்டார். சுந்தர் விலகியதை அடுத்து,’தலைவர் 173’ படத்தின் இயக்குனர் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்களிடமும், திரைத்துறையிலும் இருந்து வந்தது. இதில்,இயக்குனர்கள் அஸ்வத் மாரிமுத்து, சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டுவந்தன.

இந்நிலையில் தற்போது ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதில், சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கஉள்ளதாக அறிவித்துள்ளது மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும்,இப்படம் அடுத்த ஆண்டு 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

இப்படம் குறித்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி,தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,“ஒரு காலத்தில் ஒரு சிறிய நகரத்தை சேர்ந்த சிறுவன் தனது விருப்பமான சூப்பர் ஸ்டாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதை மிகப்பெரிய கனவாக வைத்திருந்தான். அதுவே அவனது சினிமா மீதான பேர் ஆர்வத்திற்கு உந்துதலாக இருந்தது. அந்தப் பெரிய கனவு ஒருநாள் நனைவானது. அடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்கும் மிகப்பெரிய கனவு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அது கைநழுவி போனது. இருப்பினும் அது ஒரு நாள் நடக்கும் என்று அவன் தொடர்ந்து நம்பினான். அந்த நாள்தான் இன்று.

கனவுகள் நனைவாகும், அற்புதங்கள் நடக்கும் என ரஜினி சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. சில நேரங்களில் வாழ்க்கை, கனவுகளையும் தாண்டி இன்னும் பெரியதாகிறது. ரஜினிகாந்த் சார் மற்றும் கமல்ஹாசன் சார் மற்றும் மகேந்திரன் சார் ஆகியோருக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். இந்த நம்பிக்கையை காப்பாற்ற என் முழு மனதுடனும் ஆன்மாவுடனும் அர்ப்பணிப்புடனும் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். அனிருத்துடன் மீண்டும் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.