பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் ஶ்ரீ வைத்யுலா முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். தனது மகனது இறப்பைத் தொடர்ந்து பின்னணி பாடகி ஜானகியும் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்களும் ஜானகி உயிரிழந்துவிட்டதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவின. இதுகுறித்து தற்போது ஜானகியின் பேத்தியான அப்சரா வைத்யுலா கூறியுள்ளதாவது,” பின்னணி பாடகி எஸ். ஜானகியின் புதல்வனும் எனது தந்தையுமான ஸ்ரீ வைத்யுலா முரளி கிருஷ்ணா நீண்ட கால சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 22, 2026 அன்று அதிகாலை 12:55 மணிக்கு மைசூரில் இறைவனடி அடைந்தார் அவரது இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டன. அவரது மறைவு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருப்பதால் எங்கள் உணர்வுகளைப் புரிந்து தனிமை தரக் கோருகிறோம். மேலும், எனது பாட்டி எஸ் ஜானகி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் பரப்பப்படும் சில தேவையற்ற தீங்கிழைக்கும் வதந்திகள் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் உண்மையல்ல என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர் வேதனையுடன் கூறியுள்ளார்