நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.தணிக்கைச் சான்று கோரி சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை படக்குழுவினர் முயற்சி செய்தனர். ஆனால், இறுதியில் தணிக்கை வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தது.இதனைத் தொடர்ந்து வழக்கை திரும்பப் பெற்ற படக்குழுவினர், தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்த காட்சிகளை நீக்கிவிட்டு, மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பினர்.அதன்படி,இப்படத்தை கடந்த மார்ச் 9 ஆம் தேதி மறுதணிக்கை குழுவினர் பார்வையிட இருந்த நிலையில், குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மும்பையில் நேற்று இப்படத்தை தமிழகத்தைச் சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்ட மறுதணிக்கை குழுவினர் பார்த்து முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என மறு ஆய்வின்போது சரிபார்க்கப்பட்டுள்ளது. இப்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. `ஜனநாயகன்’ படத்திலும் தேர்தல் சம்பந்தமான காட்சிகளும், அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் நடிகர் விஜயும் தீவிர அரசியலில் இயங்கி வருகிறார். எனவே இனி ஜனநாயகன் படம் குறித்த முடிவை தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் எனவும், ஜனநாயகன் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.விஜய்யின் ஜனநாயகன் படத்தை தேர்தல் ஆணையம் பார்த்து , ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தால் மட்டுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் படத்தை வெளியிட முடியும்.ஆனால், படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிறகே ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.