மேலும் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக கடந்த மாதம் மறு தணிக்கைக் குழு ஜனநாயகன் படத்தை மறுஆய்வு செய்தது. இதையடுத்து விரைவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என பலரும் காத்திருந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முழுப் பதிப்பும் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்து, படக்குழுவினர் மட்டுமின்றி, தமிழ் சினிமா துறையையே அதிர்ச்சி அடையச் செய்தது.
இவ்விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் படக்குழுவினரால் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார்,முதல்கட்டமாக, படம் வெளியான அனைத்து இணையதள முகவரிகளையும் கண்டறிந்து, 30க்கும் மேற்பட்ட இனைய தளங்களை அதிரடியாக முடக்கி, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த 6 பேரும் ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ தளங்கள் மூலம் ‘பதிவேற்றுதல்’ மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்வதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து டிஜிட்டல் தரவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் இவர்கள் வெறும் கருவிகளாக மட்டுமே செயல் பட்டதாகவும், இதில் மூளையாக செயல்பட்ட திரையுலகைச் சேர்ந்த முக்கிய புள்ளி உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இவர்கள் பிடிபட்டால், இப்படம் முதலில் எங்கிருந்து வெளியிடப்பட்டது அவர்களுக்கு இப்படத்தை சர்வர் மூலம் பகிர்ந்தது யார் என்பது உள்ளிட்ட திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘பதிவேற்றுதல்’ மற்றும் டிரைவ் இணைப்புகளைப் பகிர்ந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் சைபர் க்ரைம் காவல்துறை தரப்பு கூறியுள்ளது.
இந்நிலையில்,இந்த விவகாரம் தொடர்பாக படத்தின் எடிட்டர் விஜய் ராகவ்விடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகாததால், படத்தின் சவுண்ட் மிக்ஸிங் மற்றும் சிஜி வேலைகளுக்காக அன்னபூரணி ஸ்டூடியோவுக்கு படத்தின் காப்பியை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஒப்புதலுடன் ஜனவரி 14ஆம் தேதி அனுப்பி வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து அன்னபூரணி ஸ்டூடியோவில் இருந்து படம் லீக் ஆகி இருக்கலாம் . என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது