இந்நிலையில் தனது திரையுலக அனுபவம் குறித்து இளையராஜா கூறியுள்ளதாவது, ”ஆண்டுகள்தான் கடந்துபோகிறதே தவிர நான் முதல் படத்திற்காக எப்படி ஈடுபாட்டுடன் பணியாற்றினேனோ அதேபோல்தான் இப்போதும் பணிபுரிகிறேன். இப்போதுகூட (உடனிருந்த இயக்குநர் பால்கியை சுட்டிக்காட்டி) இவர் இயக்கும் படத்தின் பாடல் பதிவுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றவரிடம்,”எல்லோரும் உங்களை இசைக்கடவுளாக பார்க்கிறார்களே?” என்று கேட்டதும் “அவர்கள் தானே பார்க்கிறார்கள். கடவுளுக்கு தான் கடவுள் என்ற நினைப்பு இருக்குமா? இருக்காது. இசைக்கடவுளாக பார்க்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளட்டும்.
அதில் எனக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. அதனால் அவர்கள் ஒன்றும் கூடி போவது இல்லை. அவர்கள் என்னை அவ்வளவு மதிக்கிறார்கள் என்ற அன்பு தான் இதில் தெரிகிறது. இது எப்படி என்றால், ஒரு மனிதனுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கிறார்? அவன் துக்கத்தை துச்சமாக தூக்கி எரிய ஆயுதம் இருக்கிறதா? இல்லையே. குழந்தை கூட இசை கேட்டு தூங்குகிறது. இதை எல்லாம் நானா செய்கிறேன். இதற்காகவா போட்டேன், இயக்குநர் சூழலை சொன்னார்கள் போட்டேன். அந்தப் பாடல் என்னை அப்படி செய்தது, இப்படி செய்தது என சொல்கிறீர்கள். அந்த பாடல் என்ன செய்கிறதோ அதில் என்னுடைய வேலை இல்லை.சுத்தமான இடத்தில் இருந்து அந்த ஸ்வரங்கள் பிறக்கின்றன. என் மனதில் இசையமைக்கையில் வேறு எந்த நினைவும் இருக்காது. மிகவும் வெற்றிடமாக இருக்கும். கோவிலில் கூட நிலைகொள்ளாத மனதை, ஜனனி ஜனனி என்ற பாடல் நிலையாக்குகிறது.
அந்த அமைதியை நான் சொன்ன ஒரு விஷயம் கொடுக்கிறது என்றால் அந்தப் பாடல் தோன்றும் முன் அது எங்கே இருந்தது என்ற கேள்வியும் வருகிறது. அப்படி புனிதமான விஷயங்கள் வருவதால் தான் என்னை என்னென்னவோ சொல்லி கொண்டாடுகிறார்கள். இந்த மக்கள் கொண்டாட்டம் என்றென்றும், நான் இல்லாமல் போனாலும் கூட தொடரும் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.” என்றார்.இளையராஜாவின் 51-ம் வருட இசைப்பயண தொடக்கத்தையொட்டிஅவரை இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்டோர் சந்தித்து மாலையணிவித்து ஆசி பெற்றுக் கொண்டனர்.