கதாநாயகனாக களமிறங்கும் ‘மைம் கோபி’ !

தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள பிரபல குணச்சித்திர நடிகர் *மைம் கோபி, யுவர்பேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ்* தயாரிக்கும் மூன்றாவது திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விரைவில் தனது ஒளிபரப்பைத் தொடங்கவுள்ள *யுவர்பேக்கர்ஸ் ஓடிடி* தளத்திற்காக பல குறும்படங்களை இயக்கியுள்ள *சந்தோஷ்* இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களின் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
திகில் மற்றும் பரபரப்பு நிறைந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மட்டுமல்லாமல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தும் முக்கியமான சமூகக் கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் *கிஷோர் ஆதித்யா* கூறுகையில், “பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட வலுவான கதைக்களம் என்பதாலேயே இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தோம். இதுவரை ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ள மைம் கோபியை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் எங்கள் *யுவர்பேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ்* நிறுவனம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது” என்றார்.
விரைவில் படத்தின் தலைப்பு, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்…