அதிதி சங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் கூட்டணியில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ (Once More) திரைப்படம், பழைய நினைவுகளுக்கும் புதிய உறவுகளுக்கும் இடையே தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்வியல் போராட்டத்தை எதார்த்தமான முறையில் விவரிக்கிறது.
வாழ்க்கையின் ஒரு முக்கியப் புள்ளியில் ஏற்படும் ஏமாற்றத்தால் மனமுடைந்து, தனிமையே கதி என்று வாழும் நாயகனின் உணர்வுகளைத் தனது வழக்கமான ஆழமான நடிப்புத் திறனால் திரையில் கொண்டு வந்துள்ளார் அர்ஜுன் தாஸ். கதையின் ஆரம்பத்தில் தமக்குள்ளேயே சுருங்கிப் போகும் அவர், இரண்டாம் பாதியில் உறவுகளின் முக்கியத்துவத்தை உணரும் ஒரு காதல் நாயகனாக மாறுகிறார். இருப்பினும், அவரது முந்தைய பாத்திரங்களின் சாயலாக இதிலும் அவரது முகத்தில் ஒருவித அமைதியும் தீவிரத் தன்மையுமே படம் முழுவதும் பிரதானமாகத் தெரிகிறது.
ஆனால், அதற்கு முற்றிலும் நேர்மாறாக, தியேட்டருக்கு வரும் ரசிகர்களைத் தனது உடல்மொழியாலும், எதார்த்தமான நகைச்சுவை உணர்வாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை கட்டிப்போடுவது நாயகி அதிதி சங்கரின் அசாத்திய நடிப்புத் திறன் மட்டுமேயாகும். காதலில் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை மிகவும் சாதாரணமாகக் கடந்து, தமக்கு புடித்தவருக்காக உருகும் ஒரு நவீன காலப் பெண்ணின் சுபாவத்தை அதிதி சங்கர் மிக நேர்த்தியாகக் கையாண்டு, படத்திற்கு மிகப்பெரியதொரு அசுர பலம் சேர்த்துள்ளார்.
இவர்களுடன் மற்றுமொரு முக்கியத் திருப்பமாக வரும் அறிமுக நடிகை சோனா ஒலிக்கலின் கதாபாத்திரம், கதையின் போக்கை மாற்றும் ஒரு முக்கியக் காரணியாகக் களம் இறக்கப்பட்டிருந்தாலும், அவரது பாத்திரப் படைப்பில் உள்ள தெளிவற்ற தன்மை மற்றும் பலவீனமான பின்னணி காரணமாக, பார்ப்பவர்களுக்குப் படத்துடன் எவ்விதத்திலும் உணர்வுப்பூர்வமாக ஒட்டாமல் ஒரு தனித்தனித் துண்டாகவே பயணித்து ஏமாற்றமளிக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி மற்றும் செளந்தர்யா மனோகரன் உள்ளிட்ட பிற துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டு, தங்களது பங்களிப்பை நேர்த்தியாகச் செய்து முடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு மிகவும் எளிமையான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கதையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, ஒட்டுமொத்தத் திரைப்படத்தின் காட்சிகளையும் சற்றுப் பொலிவற்ற விண்டேஜ் டோனிலேயே காட்சிப்படுத்தியிருப்பது பார்ப்பவர்களுக்குக் கூடுதல் சோர்வைத் தருகிறது.

ஆனால், அதற்கு நேர்மாறாக ஹேஷாம் அப்துல் வஹாபின் (Hesham Abdul Wahab) இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் அக்மார்க் ஹிட் ரகங்களாக அமைந்து காதுகளுக்குப் பெரும் விருந்தளித்துள்ளன. ஆங்காங்கே மந்தமாகவும் தொய்வாகவும் நகரும் திரைக்கதையால் சோர்வடைந்திருக்கும் தியேட்டர் பார்வையாளர்களுக்கு, இவரது துள்ளலான பாடல்கள் பெரும் உற்சாகமூட்டும் அருமருந்தாக அமைந்துள்ளன.மேலும், இவரது பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டும் விதத்தில் பயணித்துள்ளது.
கதையின் போக்கில், முதல் பாதியில் நாயகியின் அதிரடிக் காதலும், இரண்டாம் பாதியில் நாயகனின் கடந்த காலக் காதலும் என இரு துருவங்களாக நகரும் இக்கதையை, எந்தவிதமான சுவாரசியமோ அல்லது பார்ப்பவர்களின் மனதை ஆழமாகத் தொடும் காதல் உணர்வுகளோ இன்றி மிகவும் சாதாரணமாகப் படத்தொகுப்பாளர் நாஷ் காட்சிகளைத் தொகுத்திருப்பது படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பலவீனப்படுத்தியுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், நாம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்துப் பழகிய ஒரு சாதாரணக் காதல் கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும், அதனை உணர்வுப்பூர்வமாகவும் ரசிக்கக் கூடிய விதத்திலும் திரையில் கொண்டு சேர்க்க இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் தவறியுள்ளார். குறிப்பாக, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் வரக்கூடிய காதல் மற்றும் அந்த காதல் ஜோடியின் பிரிவுக் காட்சிகள் எவ்விதமான உணர்வுப்பூர்வமான அழுத்தமும் இல்லாமல் மிகவும் மேலோட்டமாக நகர்வது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.
அதிதி சங்கரின் துருதுருப்பான நடிப்பும், அர்ஜுன் தாஸின் அந்த வழக்கம் போன்ற இறுக்கமான மனநிலையும், அவர்களது கடந்த கால பிளாஷ்பேக் காட்சியில் ஏதோ ஒரு பலமான காரணம் ஒளிந்திருக்கிறது என்ற மாபெரும் எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கிறது. இந்த ஒரு காரணியால் முதல் பாதி படம் ஓரளவிற்குச் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து சென்றாலும், இரண்டாம் பாதி படம் ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை அடியோடு பூர்த்தி செய்யத் தவறியிருப்பதோடு, தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களைப் பெரிதும் சோதித்துச் சோர்வடைய வைத்து விடுகிறது.
முதல் பாதியின் சுவாரசியத்தை இரண்டாம் பாதியின் பலவீனமான காட்சிகளால் கோட்டை விட்ட இத்திரைப்படம், காதலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.
ஒன்ஸ் மோர் – நோ மோர்!!!












