
அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுப் பதவியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர்கள், மீம்ஸ், இணையப் பதிவு போன்றவற்றை செய்யக் கூடாது .மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்கள் பணிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு , சில இடங்களில் வெற்றியும் பெற்றது..
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் அறிவுறுத்தலின் படி வெளியிடப்பட்ட அறிக்கை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அதில், ‘அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில , இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக் கூடாது.இது நம் விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில், ஏற்கெனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம்.
அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.இருப்பினும், நம் விஜய் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தைவிட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் முதல்வர் ஸ்டாலினை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சந்தித்துப்பேசியதின் விளைவாகக்கூட இந்த அறிக்கை அமைந்திருக்கலாம்.!நெல்லையில் தியேட்டரை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து முதல்வர் எச்சரித்திருக்கலாம் என்று நமப்புவதற்கும் இடம் இருக்கிறது.












