திரையிடலின் போது அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் வாய்விட்டுச் சிரித்ததோடு, உணர்ச்சிகரமான தருணங்களில் கண்கலங்கி அமைதியில் ஆழ்ந்தனர். குறிப்பாக, படத்தின் நெகிழ்ச்சியான இறுதிக் காட்சி முடிந்து படக்குழுவினரின் பெயர்கள் திரையில் ஓடியபோது, அரங்கில் இருந்த சினிமா ஆர்வலர்கள், மாணவர்கள், குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் என அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். திரையிடலுக்குப் பின்னரும் அரங்கை விட்டு வெளியேற மனமில்லாமல், நிஜ வாழ்க்கைச் சம்பவம், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் பறவைகள் குறித்த சுவாரசியமான கேள்விகளை எழுப்பி படக்குழுவினருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கூடு’, அரிய வகைப் பறவைகளின் கூடுகளைப் பாதுகாப்பதற்காக ஒரு முழு கிராமமே 35 நாட்களுக்கு மின்சாரமின்றி இருளில் வாழ முன்வரும் உன்னதமான தியாகத்தைப் பேசுகிறது. சாதாரண மனிதர்கள் ஒரு உயரிய நோக்கத்திற்காக ஒன்றிணையும்போது மனிதாபிமானம் எவ்வளவு அழகாக வெளிப்படும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
இந்த வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய இயக்குநர் ஜோயல் விஜய், முன்பின் தெரியாத பார்வையாளர்கள் ஒன்றாகச் சிரிப்பதையும், கண்ணீர் விடுவதையும், படம் முடிந்த பிறகும் அங்கேயே இருந்து உரையாடுவதையும் காண்பதே தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும், இந்தப் பெருமை படத்திற்கு ஊக்கமளித்த அந்த நிஜ வாழ்க்கை சமூகத்திற்கே உரியது என்றும் குறிப்பிட்டார்.
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கட் பதக் பேசுகையில், மொழி மற்றும் நிலவியல் எல்லைகளைக் கடந்து மக்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும்போதே சினிமா அதன் முழு ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்றும், நேர்மையான கதைகள் எப்போதும் தமக்கான பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதற்கு இதுவே சான்று என்றும் தெரிவித்தார். இதேபோல், நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக், மனிதாபிமானத்தை அழகாகக் கொண்டாடும் ஒரு திரைப்படத்தை உருவாக்கியதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.
மேலும், தயாரிப்பாளர் எம். கணேஷ் பேசுகையில், இந்தக் கதையை முதலில் கேட்டபோதே இது மிகப்பெரிய மேடையில் சொல்லப்பட வேண்டிய ஒன்று என நம்பியதாகவும், பார்வையாளர்களின் வரவேற்பைப் பார்த்தபோது படப்பிடிப்பில் சந்தித்த அனைத்து சவால்களும் அர்த்தமுள்ளதாக மாறிவிட்டதாகவும் நெகிழ்ந்தார். தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் உருவான இக்கதையுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பார்வையாளர்கள் ஆழமாக ஒன்றிணைந்தது மறக்க முடியாத அனுபவம் எனத் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி தெரிவித்தார்.
பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்கை மூன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘கூடு’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து, தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.