துன்பமும் துயரும் தொடர்கதை ஆகிறதே!
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒருமாதமாக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தொரட்டி பட நாயகனும், படத் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் நிறைய பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.
முதல் அலையின் போது பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தார்.
இரண்டாவது அலையில் நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் வெங்கட்சுபா கொரோனா தொற்றால் காலமானார்.
இந்நிலையில்,கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தொரட்டி படத்தில்கதாநாயகனாக நடித்திருந்த ஷமன் மித்ரு தற்போது கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்.