‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பான்-இந்தியா சூப்பர்ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தின் ஆக்ஷன் அதிரடி டிரைலர் நேற்று பெங்களூருவில் வெளியானது. ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்த இந்த விழாவில், ரசிகர்களுக்குப் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராவின் வருகைதான். பொதுவாகத் தனது படங்களின் விளம்பர மேடைகளைத் தவிர்க்கும் நயன்தாரா, இந்த விழாவில் கலந்துகொண்டு மேடையில் பேசிய எமோஷனல் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் தான் ஏன் கலந்துகொள்வதில்லை என்ற நீண்ட நாள் மௌனத்தை உடைத்த நயன்தாரா, “எனக்கு மேடைகளில் பேச சரியாக வராது, அதனால்தான் ஒதுங்கி இருக்கிறேன். ஆனால், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எல்லாவற்றிற்கும் மேலாக யஷ் எனக்கு ஒரே ஒரு போன் தான் செய்தார்; அவர் கூப்பிட்ட அந்த ஒரு அழைப்பே நான் இந்த விழாவிற்கு வர போதுமானதாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், திரையுலகில் தான் பல சூப்பர்ஸ்டார்களுடன் பணிபுரிந்திருந்தாலும், யஷை முதன்முதலில் நேரில் சந்தித்தபோது தான் திரையில் தோன்றும் அதே பிரம்மாண்ட ஆளுமை நிஜ வாழ்க்கையிலும் அவருக்குள் இருப்பதை உணர்ந்ததாகக் கூறிய அவர், “நான் நிஜமாகவே ‘ராக்கி பாய்’ ராஜ்ஜியத்திற்குள் நுழைகிறேனா?” என்று தனக்குத் தோன்றியதாக வியந்து பாராட்டினார். ஒரு நடிகராக யஷின் அசாத்திய உழைப்பைப் பாராட்டியதோடு நின்றுவிடாமல், கடந்த 4 ஆண்டுகளாகத் தன் கணவரின் சினிமா கனவிற்காகத் தன் நேரத்தைத் தியாகம் செய்து, யஷின் மிகப்பெரிய பலமாகப் பின்னால் நின்ற அவரது மனைவி ராதிகா பண்டிட்டின் அர்ப்பணிப்பைக் குறிப்பிட்டு நயன்தாரா மேடையில் உணர்ச்சிவசப்பட்டார்.

நயன்தாராவின் இந்தப் பாராட்டுக்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய நடிகர் யஷ், திரையுலகில் நயன்தாராவின் முக்கியத்துவத்தையும் அவரது மார்க்கெட் மதிப்பையும் தான் நன்றாக அறிவோம் என்று குறிப்பிட்டார். மேலும், “திரையுலகில் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் மாஸான மற்றும் தைரியமான சகோதரி (Badass Sister) நயன்தாரா தான்” என்று அவரைப் பாராட்டிய யஷ், படப்பிடிப்பின் போது சில தேதி சிக்கல்கள் இருந்தபோதிலும், அதையெல்லாம் நேர்த்தியாகக் கையாண்டு படத்திற்காகத் தனது சிறந்த உழைப்பைக் கொடுத்த விதம் அசாத்தியமானது என நெகிழ்ந்து பாராட்டினார்.
இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. எனபது குறிப்பிடத்தக்கது!












