தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் தமிழ் மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும், இந்தப் பாடல் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சமகால ஹிப்-ஹாப்புடன் கொண்டாடுகின்றனர்.
புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளது. பாடலின் இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம், துடிப்பான ராப் அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய காட்சியமைப்புகள் நவீன ஹிப்ஹாப் பாணியுடன் இணைகின்றன. குறும்புத்தனமான கதை சொல்லல், நகைச்சுவை கலந்த பஞ்ச் வரிகள் மற்றும் கில்லா கே, பால் டப்பா இருவருக்குமிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. தமிழ் கலாச்சாரத்தை புதிய மற்றும் துடிப்பான இசை மூலம் கொண்டாடும் இந்தப் பாடல், தமிழ் பாரம்பரியத்தை இன்றைய கலாச்சார உரையாடலுக்குள் புதிய கோணத்தில் கொண்டு வருகிறது. பாரம்பரியத்தையும் நவீன ராப் இசையையும் இணைக்கும் இந்த இசை மற்றும் காட்சியமைப்பு, தமிழ் மரபுக்கு மரியாதை செலுத்துவதோடு, அதை இன்றைய தலைமுறைக்குள் தன்னம்பிக்கையுடன் எடுத்துச் செல்கிறது.
பாடல் குறித்து கில்லா கே பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் கலாச்சாரத்தை துடிப்பானதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் மாற்றும் அனைத்தையும் கொண்டாடும் விதமாக ‘அடடா’ பாடலை உருவாக்கியுள்ளோம். ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை ஹிப்ஹாப் வழியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதே நேரத்தில் அதன் ஆன்மாவையும் உணர்வையும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்க விரும்பினோம். ஒவ்வொரு வரியும், காட்சியும், நடிப்பும் மக்கள் ரசிக்க வேண்டும், தங்களது வேர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும், மேலும் நமது கலாச்சாரத்தை புதிய விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டது” என்றார்.
பால் டப்பா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் பாடலுக்கான யோசனையை முதன்முதலில் கேட்டபோதே, இது சிறப்பான விஷயம் என்பதை உணர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தின் நகைச்சுவை, மொழி மற்றும் சினிமா பாரம்பரியத்தை நவீன ராப் இசையுடன் ‘அடடா’ பிரதிபலிக்கிறது. கில்லா கே உடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. உண்மையான, பொழுதுபோக்கு நிறைந்த, தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் பிரதிபலிக்கும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களது இருவரின் பார்வையும் ஒன்றாக இருந்தது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும் என்பதும் எங்களது நோக்கமாக இருந்தது” என்றார்.












