
தமிழகத்தின் ஆள்கிற -எதிர்க்கிற கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கிற தேர்தலாக வருகிற பாராளுமன்றத் தேர்தல் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மோடியை கடுமையாக கடைசி வரை எதிர்த்து வந்த அதிமுக தற்போது தலைவியை இழந்து எதிர்கொள்கிறது பாஜகவின் துணையுடன்!
இந்திய அரசியலில் முக்கிய சக்தியாக இருந்த கலைஞர் கருணாநிதி இல்லாமல் பழக்கப்பட கட்சிகளின் துணையுடன் சந்திக்கிறது தி.மு.க.
இந்த இரு பெரிய கட்சிகளின் தோள் மீது சவாரி செய்து பழக்கப்பட்ட ஏனைய கட்சிகள்.
இன்னும் பேச்சு வார்த்தை முற்றுப் பெறாத நிலையில் இரு அணிகள்.
அவர்களின் நோக்கமெல்லாம் விஜயகாந்தின் மீது.! அந்த கட்சியின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அந்த கட்சிக்கு கூடுதலாக இடங்கள் கிடைக்கலாம். அது அவர் நேரடியாக களம் இறங்குவதை பொறுத்தது.
அதிமுக கூட்டணி அனேகமாக முடிவாகி விட்டதாகவே சொல்லலாம். பெருந்தொகை கை மாறி இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆகவே பாமக கேட்கிற தொகுதிகளை விட்டுக்கொடுக்கிற நிலையில்தான் அதிமுக இருக்கிறது
21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் இணைந்தே நடத்தப்பட்டால் அந்த கட்சி கட்டாயம் அவைகளில் வெற்றி பெற்றாகவேண்டும்.
இல்லையேல் சட்ட மன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம்.பெரும்பான்மையான தொகுதிகள் வட மாவட்டங்களில் வன்னியர் அதிகமாக வாழ்கிற பகுதியாகவே இருக்கிறது.ஆகவே இதை பாமக வசமாக பயன்படுத்துகிறது.
காரி உமிழாத குறையாக அதிமுகவை விமர்சித்தவர்கள் டாக்டர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இருவரும்தான்.
அவர்களே இன்று அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறார்கள் என்றால் …எந்த அளவுக்கு அவர்கள் மக்களை மதிக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் வரை கொடுப்பதற்கு அதிமுக தயாராக இருக்கிறது.ஆனால் வேறு பல விஷயங்களில் தேமுதிக இணக்கமாக செல்ல விரும்பவில்லை. பாமக கவனிக்கப்பட்ட அளவுக்கு இவர்களும் கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். 
தேர்தலுக்குரிய செலவினங்களை இரண்டு பெரிய கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதாக சொல்கிறார்கள்.
அதிமுகவுடன் சேர்வதை விட திமுகவுடன் சேருவதை தேமுதிக தொண்டர்கள் விரும்பினாலும் தலைமையில் உள்ளவர்களுக்கு மத்தியில் மந்திரி பதவி இலக்காக இருக்கிறது. குறைந்த சீட்டுகளை ஒப்புக்கொள்வதாக இருந்தால் அமைச்சரவையில் இரண்டு இடங்களாவது தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இந்த நிலையில்தான் கேப்டனை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். தே.தி.மு.க தங்களின் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதன் தொண்டர்களில் ஆதரவு தங்களுக்கு கிடைக்கலாம் என திமுக நம்புகிறது.












