
கங்கை அமரனையும் கமல்ஹாசனையும் சந்தித்துப் பேச வைத்தால் என்ன ?
1986-ல் இப்படியொரு எண்ணம் ‘தேவி’ வாரஇதழில் பணியாற்றியபோது வந்தது.
உலகநாயகனும் இசை அமைப்பாளரும் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
சொன்னேன்.”அதெற்கென்ன “என ஓகே சொல்லிவிட்டார்கள்.
அந்த சந்திப்பினை இங்கே அப்படியே…!
சொல்லப்பட்ட கருத்துகள் அன்றைய காலகட்டத்துக்கு சரியாக இருந்திருக்கலாம். அந்த கருத்துகளை இன்றைய காலத்துடன் பொருத்திப் பார்க்கக்கூடாது.!
சிறப்பு நேர்காணல் ….
கங்கை : “உங்களை வச்சு படம் பண்றவங்களுக்கு என்ன தகுதி இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க?”
கமல்: “என்னோட தகுதி அது இதுன்னு , வர்றவங்க எதிர்பார்க்கிறது இல்ல. கமல் நல்லா டான்ஸ் ஆடுவார்,சண்டை போடுவாரு ,முடிஞ்சா ஒரு பாட்டும் பாடுவார்னு எதிர்பார்த்துதான் வருவாங்க. இதே மாதிரி ஆசை எங்களுக்கும் ஏன் இருக்கக்கூடாது.ஏவி.எம்மில் படம் எடுத்தா நல்லா இருக்கும்.சத்யா மூவிஸ் படம் எடுத்தா கனவுக்காட்சி இருக்கும். அப்படின்னு நெனச்சிக்கிட்டுதானே வர்றேன்.
சத்யா மூவிஸில் கனவுக் காட்சியெல்லாம் வேணாம், குடிசையில் படமெடுக்கலாம்னா எப்படி? நான் சத்யா மூவிசுக்கு நடிக்க வர்றதே கனவு காட்சிக்குத்தானே!”
கங்கை : “அப்படின்னா உங்களை வச்சு படம் எடுக்கிறவங்கெல்லாம் ஏவி.எம், சத்யா மூவிஸ் மாதிரி வசதி உள்ளவங்களா இருக்கணும்”?
கமல் : “அப்படியில்ல….மனசு இருக்கணும்.சாதுர்யமா நடக்கத் தெரியணும்.எப்படி என் வசனங்களை மறக்காம சொல்லத் தெரியுதோ ,அத மாதிரி கணக்கு மறக்காமல் கரெக்ட்டா அவங்களுக்கு செய்யத் தெரியணும்.!
எப்படி எனக்கு நாட்டியமாடத் தெரியுதோ ,அதுபோல அவங்களுக்கு ஷூட்டிங் நடத்த தெரியணும்.குறிப்பிட்ட நேரத்தில் எப்படி நான் அடிபடாமல் சண்டை போடுறேனோ அத மாதிரி அவங்க நேரத்தை வீணடிக்கக்கூடாது. நான் செட்டுக்கு வந்து இந்த வசனம் பேச மாட்டேன்,சப்பாணியா நடிக்கமாட்டேன்னு சொன்னா அது தப்பு.”
கங்கை : “காதல் பரிசு படத்தில ‘சால்ட் கொட்டா சிலுவை ‘ங்கிற பாட்டில் “இருக்குதடா பேண்ட் “என்று நான் எழுதும் போது எனக்கு ஒன்னும் தெரியல. படமெடுத்த பிறகு பார்த்தா நீங்க டிராயரோட ஆடுறதுக்கு தியேட்டரில் தூள் பறக்கும்னு நெனைக்கிறேன்.”
கமல் : அந்த பாட்டுக்கு நான் அண்டிராயரோட நடிக்க மாட்டேன்னு நான் சொன்னா தப்பு.அவங்களுக்கு அந்த காட்சி வீணா போயிரும்.”
கங்கை.: ” நாம்ப நினைக்கிற மாதிரி பண்ணனும்னா அதுக்குத் தகுந்த மாதிரி தயாரிப்பாளர்களும் அமையனும்.”
கமல்.: “ஆமா! இப்ப இளையராஜா பத்தியும் சொல்றாங்க.அவரோடகால்ஷீட்டே கிடைக்கிறதே இல்லேன்னு.! நான் அத பத்தி சொன்னா ‘இவன் எப்பவுமே இளையராஜாவுக்கு சப்பைக்கட்டு கட்டுறான்’னு சொல்வாங்க. என்னை பத்தி இளையராஜா தன்னை மாதிரி கலைஞன்னு சொல்லுவார்.நானும் என்னை விட இளையராஜா சிறந்த கலைஞன்னு சொல்வேன்.இப்போ இருக்கக்கூடிய நட்பு அது.!
அவர் என்னோட மூஞ்சி நல்லா இருக்குன்னு ரசிக்கல .அவர் உயரமா ஏழடி ரெண்டு அங்குலம் உயரம்னு நான் இளையராஜாவை ரசிக்கல. அவர் பவுர்ணமி தோறும் பூஜை பண்றாருங்கிறதுக்காக ரசிக்கல.அவருடைய இசைஞானம் ,பரந்த நோக்கு ,அத நான் ரசிக்கிறேன்.
“இல்லிங்க அவரு கால்ஷீட்டே கொடுக்கறதில்ல தொந்தரவு பண்றாரு” அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க. அவரு என்னிக்காவது வந்து “உங்க படத்துக்கு இசை அமைக்கிறேன்”ன்னு யாரிடமாவது கேட்டிருக்காரா?இல்லை.!
இப்ப இருக்கிற மார்க்கெட் டில் எல்லோரும் இளையராஜாதான் வேணும்னு போறாங்க.
அவர் “இல்லிங்க..இன்னும் ஆறு மாசம் ஆகும்.கால்ஷீட் இல்லை அப்புறமா வாங்க”ன்னு சொன்னா ஒத்துக்கிட்டு வேறொருத்தரிடம் போறவங்க எத்தனை பேர் இருக்காங்க.? இல்ல போயி வெற்றி கண்டவங்க எத்தனை பேர் இருக்காங்க.?”
கங்கை : “அவர் கிடைக்கவில்லை என்றால் சிலபேர் மியூசிக் டைரக்டரா கூட ஆயிடறாங்களே! “
கமல் : (சிரித்தபடியே ) “நான் ராஜாவோட ரசிகன்.அவரோட பாடல்களில் பெரும்பாலும் ஹிட்.அதனால் ஒரே ஆளிடம் போக விரும்புறாங்க. கங்கை அமரனிடமும் வர்றாங்க. உங்களோட இசையில் பாடல்கள் ஹிட்டாகவில்லையா?ராஜா அளவுக்கு ஹிட்டாகாமல் இருந்திருக்கலாம். போயிட்டுப் போகுது. நீங்க எடுக்கிறது யாரை வச்சு எடுக்கிறீங்க ,ரஜினி காந்தை வச்சா எடுக்கிறீங்க? இல்ல ! நீங்க அந்த ரிஸ்க்கை வேறொரு ஆர்ட்டிஸ்ட்டை வச்சு எடுக்கறப்ப ஏன் மியூசிக் டைரக்டரையும் வச்சு எடுக்கறதில்ல.?எல்லோரும் ராஜா பின்னாடி ஓடுறதால அவர் பிசியா இருக்காரு.
கங்கை : “இப்ப எம்.எஸ்.வி யும் அவரும் சேர்ந்து பண்ணிருக்காங்களே !”
கமல் : “அப்படியெல்லாம் பரந்த நோக்கோடு இருக்கிற நேரத்தில இவங்கதான் ஏதேதோ சொல்லிட்டு இருக்காங்க. எம்.எஸ்.வி.யும் எந்த விதத்திலும் திறமை குறைஞ்சு போயிடல. அவருக்கும் நேரமில்லை ,இளையராஜா அவரை ரொம்பவும் மதிக்கிறார்.நான் எம்.எஸ்.வி.யை பத்தி பேசுறபோதெல்லாம் தன்னோட மூத்த அண்ணனை பத்தி பேசறதா ராஜா பாவிப்பாரு.
சக கலைஞனை மதிக்காத தெரிந்திருக்க வேண்டும்.அது ரெண்டு பேரிடமும் இருக்கு. இளையராஜாவின் இசையை பாராட்டி எம்.எஸ்.வி.சொன்னதை நானே கேட்டிருக்கிறேன். இளையராஜாவும் எம்.எஸ்.வி.யை பற்றி “அவரு மாதிரி வருமா”ன்னு லயிச்சு புகழ்கிறார் .இருவரிடமும் ‘அதுக்கு மேலேயும் இசை அமைக்க முடியும்’ என்கிற தன்னம்பிக்கை இருக்கு.அதனாலதான் நட்பு வளருது.”












