
குறும்படங்களை தயாரிப்பது வழியாக சிலர் பெரிய திரைக்குள் வந்து விடுகிறார்கள். சர்வதேச பட விழாக்களை குறி வைத்து படம் எடுத்து விருதுகளை அள்ளிக்குவித்து மீடியாக்களிடம் சிலர் பெயர் வாங்குகிறார்கள்.
இத்தகைய பாராட்டும் புகழும் அவர்களது முன்னேற்றத்துக்கு துணையாகிறதா?
விரைவில் வெளியாக இருக்கிற கயிறு விருதுப்படம் என்ன சொல்கிறது?
இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ளபடம்தான் கயிறு.
ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.
இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
‘கயிறு’ இயக்குநர் கணேஷ் தமிழ் சினிமாவுக்கு புதியவர் அல்ல.
தளபதி விஜய் ,ஷாலினி நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களின் இணை இயக்குநர். இது தவிர கண்ணுக்குள் நிலவு மற்றும் ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களின் இயக்கத்திலும் கணேஷ் பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் கணேஷ் தன்னுடைய கயிறு பற்றி என்ன சொல்கிறார்?தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அது போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துகிறது.
தினமும் காலையில் காளை மாட்டுடன் வீடு வீடாக சென்று குறி சொல்லும் ஒரு பூம் பூம் மாட்டுக்காரனை பற்றிய கதை. அவனுக்கு காதல் வருகிறது. அவளைக் கல்யாணம் செய்ய வேண்டுமென்றால் குறி சொல்கிற தொழிலை விட வேண்டும் என்கிற நிர்பந்தம். அந்த தொழிலை அவன் தந்தை வழி வந்த பாரம்பரிய கொடையாக நினைக்கிறான்.பூம் பூம் மாட்டை இழக்க விரும்பவில்லை. மேலும் பல சமூக கருத்துகளை பதிவு செய்திருக்கிறேன் “என்கிறார்.












