
இன்று காலை 9 மணிக்கு மேல் தமிழ்நாட்டின் முகம் மாறத்தொடங்கியது.
“இப்போது மாற்றம் இல்லையென்றால் எப்போதுமே மாற்றம் இருக்காது”என்று இதைத்தான் நடிகர் ரஜினிகாந்த் சொன்னாரோ என்னவோ ,அவர் சொன்ன மாற்றம் தமிழகத்தில் நிகழ்ந்து விட்டது.
அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சி அமைந்து விட்டது.
இன்று காலை தமிழக ஆளுநர் மாளிகையில் “முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக” பதவி ஏற்றுக்கொண்டார்.
ஸ்டாலினின் மனைவி துர்கா ,மகன் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கணவர் ஸ்டாலின் ‘போடியம் ‘அருகில் வந்து நின்று தன்னுடைய பதவி ஏற்பு உறுதிமொழியின் முதல்வரிகளை உச்சரித்தபோது திருமதி துர்கா ஸ்டாலின் கண் கலங்கியதைக் காண முடிந்தது.
பதவி ஏற்பு விழாவுக்கு அதிமுக சார்பில் வந்திருந்தவர் ஓ பன்னீர் செல்வம் மட்டுமே.
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கூட்டணி தலைவர்களில் ஒருவரான வைகோவும் வந்திருந்தார். கமல்ஹாசன் தனக்குப்பிடித்தமான கருப்புச்சட்டையில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
எவ்வித ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட கொரானா, நாடு முழுமையாக தன்னுடைய கொடுங்கரத்தை பரப்பி இருப்பதை நேரில் காண முடிந்தது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தார்கள் .












