உலக நாயகன் கமல் ,சூப்பர் ஸ்டார் ரஜினி இவர்களுக்கு இடையேயான நட்பின் ஆழம் அவர் களுக்குத் தெரியும்.
ஆனால் ரசிகர்களுக்குத் தெரிவதில்லை. புரிதல் இல்லை என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. மக்கள் திலகம் ,நடிகர் திலகம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல. “கணேசும் வந்துரட்டுமே, ஒன்னா உக்காந்து சாப்பிடுவிங்க “என்று எம். ஜி. ஆரின் அன்னை சொல்லுவாராம்.
முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் இதை பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இரு திலகங்களின் ரசிகர்களும் மறந்துவிடுவார்கள். மோதிக்கொண்ட நிகழ்வுகள் அதிகம் . அதுதான் இன்றைய உலகம், சூப்பர் ரசிகர்களிடமும் நடக்கிறது.
அவர்களுக்காக ஒரு நினைவூட்டல்.
வேணு செட்டியார், திரைப்படத் தயாரிப்பாளர் ,கலைஞருக்கு பாதுகாப்பு அதிகாரி மாதிரி. டாக்டர் கலைஞர் கருணாநிதி எங்கு சென்றாலும் இவரும் செல்வார். அவருடன்தான் இருப்பார். உடன்பிறப்பு.
செட்டியார் இயக்குநர் மகேந்திரனை வைத்து ஒரு படம் தயாரித்தார். முள்ளும் மலரும் என்பது டைட்டில். முக்கிய நடிகர்கள் ரஜினிகாந்த் .சரத்பாபு, ஷோபா படாபட் ஜெயலட்சுமி.மகேந்திரனுக்கு இதுதான் முதல்படம்.
ஒரே ஒரு காட்சி படமாக்கப்பட்டு விட்டால் படம் முடிந்து விடும் வணக்கம் போட்டு விடலாம் ,
எடுத்த காட்சிகளை போட்டுப்பார்த்த செட்டியாருக்கு சினம் சிரசில் நடனம் ஆடியது “என்னய்யா படம் எடுத்து வச்சிருக்கே ,கமர்ஷியல் அயிட்டம் எதுவுமே இல்லை. நீ கிழிச்சது போதும் . புதுசா ஒண்ணும் கிழிக்க வேணாம் , போதும்.எடுத்ததை வச்சு ரிலீஸ் பண்ணிடலாம் ,இனி ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன். போ “என்று தாண்டவமாடிட்டார் ,
மகேந்திரன் சிலையாக நின்று விட்டார். ஒரே ஒரு காட்சி படமாக்கப்பட்டு விட்டால் போதும். கதை முழுமை பெறும் . ஆனால் வேணு செட்டியார் கடூரம் காட்டுகிறாரே !மகேந்திரன் கேட்காத ஆளே இல்லை கோடம்பாக்கத்தில். அத்தனை பேரும் பணம் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். சக்தி வாய்ந்த செட்டியாரை யார்தான் பகைத்துக்கொள்ள முடியும்?
அப்பதான் உலகநாயகன் கமல்ஹாசன் கை கொடுத்தார்.
“மீதமுள்ள காட்சியை முடியுங்கள்”என்று கத்தை கத்தையாக நோட்டுகளை இயக்குநர் மகேந்திரனிடம் கொடுத்து “படத்தை முடியுங்கள் “என்று சொன்னார். இந்த உதவியை மகேந்திரன் கடைசி வரை நெஞ்சக பெட்டியில் பாதுகாத்து வந்தார்.
கமல் உதவி செய்திராவிட்டால் முள்ளும் மலரும் வெளி வந்திருக்காது. ரஜினியின் வேறுபட்ட நடிப்பும் தெரிந்திருக்காது,
ஆக ரசிகர்கள் தங்களின் ஆர்வத்தை நெறிபடுத்திக் கொள்ள வேண்டும்.












