மனிதரில் புனிதர் ஏவி.எம் சரவணன் .
எதிரிக்கும் தீங்கு நினையாமனிதர். அடக்கம் ,இரக்கம்,அன்பு பண்பு அத்தனையும் நிறைந்த மாமனிதர் மறைந்து விட்டார்.மனம் கனக்கிறது.கண்கள் அருவியாகிறது.
அவருக்கு சினிமா முரசம் அஞ்சலி செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் இல்லத்து உயரிய உறவுகளுக்கு ஆறுதல் சொல்லுவதை விட வேறு என்ன செய்ய முடியும்?
திரை உலகத்தின் தூண் ,எஞ்சி நின்றது இவர் மட்டுமே. இன்று இவரும் இயற்கை அடைந்து விட்டார்.படப்பிடிப்பு நிலையத்தின் முகப்பு வாயிலில் சுற்றிக்கொண்டிருக்கும் உலக உருண்டை ஒரு நிமிடம் நின்று அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீருடன் சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கே இருந்தாலும் அது எந்த இடமாக இருந்தாலும் கை கட்டி நிற்பது இவரது பழக்கம் ,வழக்கம்.
தமிழ்ச் சினிமாவில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏவிஎம் நிறுவனம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்ஜிஆர் ,உலக நாயகன்கமல்ஹாசன் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்குவெற்றிக் கோப்பைகளை வாரி வழங்கிய நிறுவனம் ஏவி எம் .உயரிய வாழ்க்கைக்கு வழி காட்டியாக இருந்தது.
ஏவிஎம் நிறுவனத்தின் பேனரில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என முன்னணி நடிகரில் இருந்து வளரும் நடிகர் வரை எண்ணி ஏங்கிய காலமும் இருந்தது.
தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட நிறுவனம்.
சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி, அயன், வேட்டைக்காரன், லீடர், திருப்பதி, ஜெமினி, எஜமான், மின்சார கனவு, ராஜா சின்ன ரோஜா, மனிதன் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கு பின் ஏவிஎம் நிறுவனம் தங்களின் திரைப்படத் தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது.ஏவி எம் சரவணனுக்கு எம்.எஸ். குகன், உஷா என்ற மகனும், மகளும் உள்ளனர் தற்போது இந்நிறுவனத்தை எம்.எஸ். குகன் கவனித்து வருகிறார்.இதுவரை 180-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறது. மேலும் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடரையும் தயாரித்து உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஏவிஎம் சரவணன் (வயது 86) உடல்நிலை குறைவு ஏற்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி அறிந்ததும் விரைந்து வந்தார். இறுதி மரியாதை செலுத்தி விட்டு சரவணனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
அவரது உடல் இறுதி மரியாதைக்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் இன்று காலை 7.30 மணி முதல் வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு, தமிழ் சினிமா நடிகர்கள், ரசிகர்கள் என்று அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் ஏவிஎம் ஸ்டுடியோ பின்புறமுள்ள சுடுகாட்டில் நடக்கிறது. ஏவிஎம் சரவணன் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். பெரிய சாம்ராஜ்யமே அவரது கைகளில் இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் விழாக்களில் கலந்து கொள்வார்.. ,கமல் ,ரஜினி முதல் அத்தனை நடிகர்களும் மெய்யப்ப செட்டியார் மீது வைத்திருந்த அதே மரியாதையையும், அன்பையும் இவர் மீதும் வைத்திருந்தார்கள். ஏவிஎம் சரவணன், ஏவிஎம் ஸ்டூடியோவின் கதை இலாகா பணியிலும் பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி சென்னை மாநகர் ஷெரீப் என்ற பதவியை கடந்த 1986ஆம் ஆண்டு வகித்த அவர் நேற்றுதான் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.சரவணனின் மறைவு தமிழக சினிமாவுக்கு பேரிழப்பு.
இவரது அன்புக்கு உரிய மனிதர்களில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் முதலிடம் வகிப்பவர் .பேரிழப்பை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாரோ?
–தேவி மணி ,
சினிமா முரசம்.












