பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசியும், விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம், ‘நூறு சாமி’. இதில்,சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் 19-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் காத்து கொண்டு பேசுகையில்,சினிமாவில் சாமிகள் கிடையாது, மிகவும் குறைவு தான். ஒரு பத்து பேர் தேறுவார்களா என்பது கூட சந்தேகம்தான். ஆனால், என் இந்த 30 வருட சினிமா வாழ்க்கையில் மாதத்திற்கு ஒரு முறை ஃபோன் செய்கிற, என்னை உற்றுப் பார்க்கிற, என்னை நேசிக்கிற, நான் இல்லாத இடத்தில் கூட என்னைப் பற்றி எப்போதும் அன்பாக, உயர்வாக, பெருமையாகப் பேசுகிற ஒரே சாமி, என் சசி சாமி தான். நாம் சினிமாவில் எவ்வளவோ சாதித்து நேஷனல் அவார்டு வாங்கலாம், ஃபிலிம்ஃபேர் விருதுகளை அள்ளலாம்… ஆனால் ஒரு நாள் நாம் இறந்துவிடுவோம். இந்த சசி என்ற மனிதன் இருக்கிறானே, அவன் சாகவே மாட்டான். அவன் ஒரு சாமி, என் அண்ணன் அவன். நான் ஆரம்பக் காலத்தில் இயக்குனர் கதிர் சாருடன் பணியாற்றும்போது அவ்வளவாக யாரிடமும் பேசமாட்டேன். ஆனால், அந்த விரக்தியான நேரத்தில் நான் முழுமையாக நம்பிய, நேசித்த ஒரே சாமி என் சசி சாமி தான்.நூறு சாமிகள்’ படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு சசி முதலில் எனக்குத்தான் போன் அடித்தார். நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டுவிட்டு, நீ ஆபீஸில் இருந்தால் ஒரு இரண்டு மணி நேரம் வெளியில் சென்று விடு, நான் உன் அசிஸ்டன்ட்களிடம் கதையைச் சொல்ல வேண்டும் என்றார்.
இத்தனை வருட சினிமா வாழ்க்கையில், ஈகோ பார்க்காமல் வேறு ஒரு இயக்குனரின் அசிஸ்டன்டுகளை முழுமையாக நம்பி ஒரு கதையைச் சொல்கிறார் என்றால், அது சசி அவர்களால் மட்டும்தான் முடியும். டென்ஷன் ஆகிவிடும்: எனக்கு படம் பார்க்கும் பழக்கம் கிடையாது, பொதுவாக நான் அதிகமாகப் படங்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், நான் பார்க்கும் படம் நன்றாக இல்லை என்றால் எனக்குள் ஒரு டென்ஷன் வந்துவிடும். இதற்கு மேல் நம்மால் படமே எடுக்க முடியாது என்ற விரக்தி வந்துவிடும். அதே நேரத்தில் ஒரு நல்ல படத்தைப் பார்த்துவிட்டால், அந்தப் படம் கொடுத்த உற்சாகத்தில் அடுத்தடுத்து 25 படங்களுக்கு மேல் பண்ணலாம் என்கிற ஒரு அசாத்திய உத்வேகம் எனக்குள் பிறக்கும். அப்படித் தான் இந்த ‘நூறு சாமி’ படத்தைப் பார்த்த பிறகு எனக்குள் ஒரு மிகப்பெரிய உத்வேகம் வந்திருக்கிறது”இவ்வாறு அவர் பேசினார்
இயக்குநர் சசி பேசுகையில், ” இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, ‘நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்’ என்றார்.இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் ‘நூறு சாமி’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு ‘பாஸ்’. ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்- படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.
என்னுடைய இரண்டாவது பாஸ், ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்… தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் ” இவ்வாறு அவர் பேசினார்












