பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து அதன் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த நடிகை கவுதமி, திடீரென அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “இன்று (14/06/2026) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள்,பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி, என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக நாற்பத்தி ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால்,அதிருப்தியடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் நிர்வாகிகளும் அதிமுகவிலிருந்து விலகி, மற்ற கட்சிகளால் குறிப்பக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில் அதிமுகவின் கொள்கைபரப்பு துணைப் பொதுச் செயலாளராக இருந்த நடிகை கௌதமி தற்போது அதிமுகவில் விலகி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












