
வணக்கம் தாயே,!
பொதுவாக ஆசிர்வாதம் பெறுவதற்காக காலில் விழுகிற மணமக்களை “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க “என பெரியவர்கள் வாழ்த்துவார்கள்.
அவர்கள் சொல்கிற பதினாறுக்கு என்ன பொருள் என்பது சிலருக்கு தெரியாது. கேட்டால் “பிள்ளைகளை பெத்துக்குங்க ” என்பதைத்தான் அப்படி சொன்னோம் என்பார்கள் .
ஆனால் 16 வகையான செல்வங்களை பெற்று சிறப்புடன் வாழ்க என்பதுதான் அதன் அருத்தம்.
ஏற்கனவே இரட்டையர்களை பெற்ற மகராசி, தற்போது ஒரே பிரசவத்தில் 7 ஆண் ,3 பெண் என பத்து மக்களை பெற்றிருக்கிறாள் .உலக சாதனை.!
கோஷியாமே தமரா சிதோல் என்கிற தென்னாப்பிரிக்க பெண்மணிதான் அந்த புண்ணியவதி.! 37 வயதாகிறது. அறுவை சிகிச்சைதான்.!அந்த பெண் எட்டு பிள்ளைகள் தேறும் என்று கணக்கிட்டிருக்கிறாள் .ஆனால் வரவு பத்தாக இருந்துவிட்டது.
குறை பிரசவம்தான். பத்து குழந்தைகளும் தற்போது இங்குபேட்டரில் !
“நான் ரொம்பவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். எமோஷனலா இருக்கிறதால என்னால அதிகமா பேச முடியல. நாளைக்கு வாங்க பேசலாம்”என்று பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்து விட்டார்கள் சாதனையாளரான அப்பா ட்சோடெசி .!
உண்மையில் இவர் சாதனையாளரா,அல்லது இவரது மனைவி சாதனையாளரா ?












