கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் (Production No 10) படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இத்திரைப்படத்தை ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிசேயோன் இயக்குகிறார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் இத்திரைப்படத்தை எல்கே சுதீஷ் எம்பி பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்த விமரிசையான படப்பூஜையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து தொடங்கி வைக்க, பூர்ண ஜோதி சுதீஷ் முதல் காட்சிக்கான கிளாப் அடிக்க படப்பிடிப்பு இனிதே ஆரம்பமானது.
இந்தத் தொடக்க விழாவில் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், மூத்த நடிகர்கள் இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், சின்னத்திரை பிரபலம் மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, நடிகைகள் பிரகதி, காயத்ரி மற்றும் இயக்குநர் திரு, ஒளிப்பதிவாளர் அர்வி உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் நேரில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.இப்படத்திற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, மனு இரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

ஏற்கனவே கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த பத்தாவது திரைப்படத்தின் படப்பிடிப்பும் இணையாகத் தொடங்கி முழு வீச்சில் நடைபெற உள்ளது. இதனால் சண்முக பாண்டியன் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களில் பிஸியாகியுள்ளார். சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ‘டைட்டில் லுக்’ (Title Look) போஸ்டரை நேற்று மாலை 6 மணிக்கு முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.












