கே.ஆர்.ஜி. (KRG) குழுமத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெரும் பொருட்செலவில் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா மற்றும் ‘வைகைப்புயல்’ வடிவேலு மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் அரிதாக வெளியாகும் ‘ஜாம்பி ஆக்ஷன் த்ரில்லர்’ (Zombie Action Thriller) எனும் முற்றிலும் புதுமையான பாணியில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்து, விரைவில் உலகளாவிய வெளியீட்டிற்குத் தயாராகி வரும் நிலையில், படத்திற்கான விளம்பரப் பணிகளைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.
இளம் இயக்குனர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு ஆகியோருடன் இணைந்து பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹெச்.சி. வேணு மற்றும் விக்னேஷ் வாசு இணைந்து ஒளிப்பதிவு செய்ய, முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்துள்ளார். படத்தொகுப்பாளர் ஆண்டனி (Editor Antony) படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா கவனித்துள்ளார். இப்படத்திற்குத் தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்,
தயாரிப்பாளர் கண்ணன் ரவிதான் தற்போதைய சூழலில் ஒட்டுமொத்தத் திரையுலகிலும் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக விளங்குகிறார் என்றும், அவரைப் பற்றிப் பொதுவெளியில் வெளியாகி வரும் பல்வேறு விமர்சனங்களுக்கான தெளிவான விளக்கத்தை அவரே இந்த மேடையில் வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் அதிரடியாகக் குறிப்பிட்டார். 1990-களில் வெளிநாடு சென்று உழைத்துத் தனது பொருளாதாரத்தை உயர்த்திய கண்ணன் ரவி, ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவைப் போலத் தான் பிறந்த மண்ணிற்கும், தமிழ் சினிமாவின் பல்வேறு சங்கங்களுக்கும் தொடர்ந்து ஏராளமான நற்பணிகளையும், நிதியுதவிகளையும் செய்து வருவதாக நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். இப்படத்தில் வடிவேலு மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் தங்களது அசாத்திய உழைப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் கண்ணன் ரவி,
நாம் சம்பாதிக்கும் பொருளில் ஒரு குறிப்பிட்ட தொகையை நலிவடைந்த மக்களுக்காகச் செலவழித்திட வேண்டும் என்றும், அவ்வாறு தர்மம் செய்யத் தவறினால் அந்தப் பணம் தானாகவே நம்மை விட்டு அழியத் தொடங்கிவிடும் என்ற அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கை கொண்டவன் நான் என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தோனேசியத் தீவுகளில் படப்பிடிப்பை நடத்தலாம் என்ற ஆலோசனையைத் தான் முன்வைத்ததாகவும், தங்களது படக்குழுவினர் அங்குச் சென்றிருந்த போது கடந்த 20 ஆண்டுகளாக வெடிக்காமல் இருந்த எரிமலை திடீரென வெடித்த அரிய இயற்கைக் காட்சியைத் தங்களது கேமராவில் தத்ரூபமாகப் படமாக்கியுள்ளதாகவும் சுவாரசியமாகத் தெரிவித்தார்.
“நானும் அந்த எரிமலையைப் போன்றவன் தான்; எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன். ஏனெனில், நானும் கோபம், அன்பு, பாசம் ஆகிய நவரச உணர்வுகளைக் கொண்ட ஒரு சாதாரண மனிதன் தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட தயாரிப்பாளர், திரையரங்குகளில் டிக்கெட் வாங்கிப் பார்க்கும் சாமானிய ரசிகர்களின் கோணத்திலிருந்து இக்கதையை ஆராய்ந்து, திரைக்கதையில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தான் இயக்குநரிடம் கூறியதாகவும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் அதனை ஏற்றுக்கொண்டு செதுக்கியுள்ளதால் இது ஒரு உண்மையான கூட்டுத் தயாரிப்பாக உருவெடுத்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். நிறைவாக, அண்மைக் காலமாக இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் தன் மீது திட்டமிட்டு எழுப்பப்பட்ட ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மிகவும் நிதானமாகவும், அதே சமயம் ஆணித்தரமாகவும் உரிய ஆதாரங்களுடன் அவர் தனது விளக்கத்தை அளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.












