
சிறு படத் தயாரிப்பாளர்களை வாழவைக்கிறோம் என சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
அதாவது சின்ன பட்ஜெட் படங்களை திரையிடுவதற்காக அமைக்கப்பட்ட அந்த ரெகுலேஷன் கமிட்டி சொல்கிற நாட்களில் சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவரவேண்டும்.
அந்த நாளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது .இதுதான் அந்த கமிட்டியின் நோக்கம்.
ஆனால் இந்த கமிட்டிக்கு அப்பாவி படத் தயாரிப்பாளர்கள் மட்டுமே கட்டுப்படுகிறார்கள். பெரிய தயாரிப்பாளர்கள் கமிட்டியை மதிப்பது கூட இல்லை என்றே தோன்றுகிறது.
சின்னப்படங்களுக்கு எதிராக பெரிய படங்களை இறக்கிவிட்டு தியேட்டர் கிடைக்காமல் செய்து விடுகிறார்கள்.
தற்போது புது பஞ்சாயத்து.!
டிச.14 -ல் சீதக்காதி, டிச.21-ல் அடங்க மறு, பூமராங்,சிலுக்குவார்பட்டி சிங்கம், டிச.28 -ல் கனா என பட்டியலை வெளியிட்டிருக்கிறது ரெகுலேஷன் கமிட்டி.! இதுக்கு வேட்டு வைக்கிறார் தனுஷ்.
தனது மாரி 2 படத்தை ஜனவரியில் வெளியிடுவதாகத் தான் திட்டமிட்டிருந்தார். ஆனால் மாமனாரின் பேட்ட, தலயின் விஸ்வாசம் ஆகிய பெரும்படங்கள் வருவதால் டிச.2 1 ம் தேதிக்கு மாரியை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
அன்றைய தேதியில் அடங்க மறு ,பூமராங்,சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாவதாக இருக்கின்றன. தனுஷும் அந்த தேதிக்கு மாற்றினால் தியேட்டர்காரர்கள் நிச்சயம் மாரி 2 க்குத்தான் இடம் கொடுப்பார்கள். பாதிக்கப்படுவது சிறியபட்ஜெட் படங்கள்தான்.!
ஆக வலுத்தவன் கைதான் இங்கே ஓங்குகிறது.தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்துக்கு தனுஷ் இணங்கி வரவில்லை என்கிறார்கள்.
அட போங்கப்பா,நீதி மன்ற உத்தரவுக்கு அரசுகளே கட்டுப்படவில்லை என்கிறபோது இதென்ன பெரிய மேட்டர்?












