
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யார்,யார் நிற்கப்போகிறார்கள் என்பது பற்றி இதுவரை யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை.
விஷால் நிற்பாரா என்பது பற்றியும் தகவல் இல்லை. நாசர் மறுபடியும் அணி சேர்ப்பாரா என்றால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் விட்ட பணியை முடித்துக்கொடுக்க அவர்கள் நின்றே ஆவார்கள்.அவர்கள்தான் நடிகர் சங்கத்தின் புதிய மாளிகையை கட்டி முடித்து திறப்பு விழா நடத்துவார்கள் என நம்பிக்கைக்குரிய பெரியவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இவர்களை எதிர்த்து நிற்பதற்கு ராதிகா சரத்குமார் தலைமையில் ஒரு அணி திரண்டு இருக்கிறது.கடுமையான போட்டி நிலவுகிறது என்பதெல்லாம் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது.இந்த செய்திகளுக்கு பின்புலம் யார் என்பது தெரியவில்லை
இது பற்றி கேட்டதற்கு முன்னர் ராதிகா சொன்ன பதில் “நான்சென்ஸ்”என்பதுதான்!
ஆனாலும் விடாது கருப்பு என்பது போல இன்றும் ராதிகா அணி பற்றி செய்தி வந்திருக்கிறது.
மீண்டும் ராதிகாவிடம் பேசினோம்.
“அணியாவது பிணியாவது. அன்னிக்கி நான் ஊர்லேயே இருக்க மாட்டேன். என்னை நடிகர் சங்கத்திலிருந்து யாரும் கூப்பிட்டதும் இல்ல.நான் போனதும் இல்ல. எனக்கு ஷூட்டிங் பிசி. அதனால இப்படி பொய்யான தகவல்களை,வதந்திகளை கிளப்பி விட்டுக்கிட்டிருக்காங்க. அணிசேர்வோம்னு யாராவது வந்தா உதைப்பேன்” என்று சிரிக்கிறார்.
இவ்வளவு சொல்லியும் அணி கிளம்புமா என்ன?












