
சினிமாவில் அல்லது அரசியலில் யாராவது ஒரு கருத்தை சொல்லிவிட்டால் அந்த கருத்துக்கு பதில் சொல்லவோ ,மறுத்து சொல்லவோ பலர் தயங்குவார்கள்.
பதிலோ கருத்தோ சொல்லிவிட்டால் அந்த பிரபலம் தன்னுடைய எதிர்காலத்துக்கு உலை வைத்து விடலாம் என்கிற பயம் தான் காரணம்.
சில சினிமா பிரபலங்கள் வருமானவரி சோதனைகளை சந்திப்பதற்கு காரணமே அரசியல் பழி தீர்த்தல்தான் ! கஞ்சா வைத்ததாக பொய்யான வழக்குகளை போட்டு வதை பண்ணுவார்கள்.
சரி அதை எல்லாம் விட்டுத்தள்ளுங்க.
நடிகர் ,இயக்குநர் ,தயாரிப்பாளர் ,எழுத்தாளர் இப்படி பன்முகம் கொண்டவர் கவிராயர் பார்த்திபன்,
இவரது ‘கிறுக்கல்கள் ‘ ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம் ‘ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது.
நடந்து முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பு.
குடியுரிமை சட்டம் பற்றிய கேள்வியை கேட்காமல் இருக்க முடியுமா?
மொத்த இந்தியாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறதே!
கேள்வியை கேட்டார்கள்.
பதிலும் இப்படி இருக்கிறது. நீங்கள் என்ன தீர்மானத்துக்கு வருவீர்கள்?
“போராட்டம் இல்லாமல் எந்த சித்தாந்தமும் வெற்றி பெற்றதில்லை. ஒவ்வொரு சராசரி பிரஜையும் அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் அரசியல் மீது மிகுந்த ஈடுபாடு இருக்க வேண்டும் என்பது அடிப்படையான ஒன்று
என்னை பொருத்தவரை நான் தேர்ந்தெடுத்த தொழில் சினிமா என்பதால், எனக்கு சினிமாவை தாண்டி ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன் சினிமாவில் தன்னிறைவு அடைய வேண்டும்.
அதன்பின்னர் தான் நான் அரசியலுக்கு செல்ல முடியும்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இப்பொழுது தான் அரசியலுக்கு வந்துள்ளனர்.
அதனால் இன்னும் கொஞ்ச நாள் சினிமாவில் சாதித்துவிட்டு அதன் பின்னர் நான் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.
ரஜினிகாந்த் எதோடு சார்ந்து இருக்கிறார் என்பது இப்போது பிரச்சனை இல்லை.
அவர் கூறும் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பதால் தான் அந்த கருத்து அதிகமாக பரவி வருகிறது.
அவரது கருத்தை நாம் ஒதுக்கி வைத்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.
போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது, எந்த வெற்றியும் கிடைக்காது. ஆனால், அவருடைய கருத்து வேறுவிதமாக இருக்கிறது. எனவே ரஜினியின் இந்த கருத்தை நாம் பெரிதுபடுத்தாமல் இருந்தாலே போதும் “என்று சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.












