‘தமிழகத்தை புனரமைப்போம்-எதிர்காலத்துக்கான பாதை’ என்ற பெயரில் செயல்திட்டத்தை அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் வெளியிட்டார்.
‘தமிழகத்தை வழிநடத்த ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்
.
உலகநாயகன் கமல்ஹாசன் மேலும் கூறியதாவது.
,“தேர்தல் அறிக்கைக்கு முன்னோட்டமாக ‘தமிழகத்தை புனரமைப்போம்-எதிர்காலத்துக்கான பாதை’ என்ற பெயரில் இந்த செயல் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறோம்.
2021 சட்டசபை தேர்தலுக்கு எத்தனை நாட்கள் இருக்கிறது? என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருப்பது போல, நாங்களும் எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டுமா? அல்லது தனித்து போட்டியிடவேண்டுமா? என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தை மாற்றக்கூடிய தலைமை எங்களிடம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். வருங்காலத்தில் என்னுடைய தலைமையில் ஒரு அணி உருவானால், அதனை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று மற்ற கட்சிகள் முடிவு செய்யும்.கூட்டணி அமையும்போது எங்கள் தரப்பில் இருந்து முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முன்மொழிவோம். அதே சமயத்தில் அவர்களுக்கும் தனி மரியாதை கொடுக்கவேண்டும். இதை பின்னர் விவாதித்து தான் சொல்லமுடியும். இதற்கான பதில் வருங்காலத்தில் கிடைக்கும். மக்கள் அதற்கான நல்ல பதிலை கொடுப்பார்கள். மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
மாற்றத்துக்கான தலைமை, நேர்மையான தலைமை, தைரியமான தலைமை, புத்துணர்ச்சியான தலைமை உள்ளிட்ட பண்புகள் உடைய முதல்-அமைச்சர் வேட்பாளர்கள் வேறு யாரும் இல்லை என்று நான் கருதுகிறேன். என் பார்வையில் தமிழனாக எனக்கு தென்படவில்லை. யாரும் கோபப்படவேண்டியது இல்லை. ரஜினிகாந்தும், நானும் தமிழகத்தின் மேம்பாடு குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம். அதில் கொள்கை ரீதியாக மாறுதல் இருக்கலாம்.
ஆனால் இப்போது ரஜினிகாந்த் சொல்லிக்கொண்டு இருக்கும் விஷயங்கள் சற்றே மாறுபட்ட தமிழகத்தின், தேசத்தின் நலன் நோக்கிய அணி சாராத நிலை இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது.
அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஏற்கனவே தேவைப்பட்டால் இணைவோம் என்று கூறியிருக்கிறோம். நல்ல எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை நாங்கள் நடத்தவேண்டும். அதற்காக யார், யாரெல்லாம் நேர்மையை நோக்கி நகர துணிகிறார்களோ, அவர்களுடன் ஒன்று சேருவோம். தமிழகத்தை முன்னேற்றுவதுதான் எனது லட்சியம்.
என் தலைமையில் 3-வது அணி உருவானால், தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட திராவிட வாக்கு வங்கிகளை உடைத்து வெற்றி பெற முடியுமா என கேட்கிறார்கள் நான் பெரிதாக மதிக்கும் எம்.ஜி.ஆர்.சிவாஜி இருந்த திரைத்துறையில், அவர் கள் இருக்கும்போதே, அவர்களுடைய ஆசியுடன் அந்த இடத்தை கைப்பற்றியவர்கள் நாங்கள். அவர்களுடைய ஆசியுடன், போட்டியாளர்களாக அல்ல. அந்த தலைமை அரசியலிலும் இப்போது இருக்கிறது என்று நம்புகிறேன். அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளோடு மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதற்கு கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.”இவ்வாறு அவர் கூறினார்.












