
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன்னுடைய ஊதியத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் . கொரானா ஊரடங்கு உத்திரவு மொத்த திரை உலகையும் அவசரப்பிரிவு ஐ.சி.யூ.வில் தள்ளிவிட்ட நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான வழிகளில் இந்த ஊதிய குறைப்பும் மெத்த உதவும் என்கிற நல்லெண்ணம் முக்கிய காரணம்!
விஜய் ஆண்டனியின் ஊதியக்குறைவு அறிவிப்புக்குப் பிறகு பல நடிக நடிகையர் ஊதிய குறைப்பு செய்வதாக அறிவித்தார்கள். பிக்பாஸ் நடிகை ஆர்த்தி கூட ஒரு ரூபா சம்பளம் வாங்கத் தயார் என்பதாக அறிவித்திருந்தார். இவர் வந்து போகும் கார் செலவே பல ஆயிரங்களைத் தொட்டுவிடும். அதை எந்தக் கணக்கில் எழுதுவது? தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே பலர் ஊதிய குறைப்பு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்களது ஊதியக்குறைப்பு அறிவிப்பினால் தயாரிப்பாளர்களுக்கு எந்த அளவுக்கு நன்மை?
வணிகரீதியாக விஜய் ஆன்டனியைத் தவிர்த்து வேறு எந்த நடிக ,நடிகையர் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருப்பார்கள்.?
இவர்கள் இருப்பதால் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் இவர்களது படங்களை விரும்பி வாங்குவார்களா? சாட்டிலைட் உரிமை விலை போகுமா? ரசிகர்களின் ஆதரவு இருக்குமா?
நடுநிலையுடன் இருந்து யோசித்துப்பாருங்கள்.!
ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் , விஜய் ,அஜித்குமார்,விஜயசேதுபதி ,சூர்யா ,கார்த்தி ,சிவகார்த்திகேயன் ,சிம்பு ,விக்ரம் ,தனுஷ் ,ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ,நயன்தாரா, .மாளவிகா மோகனன் .கீர்த்தி சுரேஷ் ,சாய் பல்லவி போன்ற நடிகைகள் யாரேனும் ஊதியக்குறைப்புப் பற்றி அறிவித்திருக்கிறார்களா? சைலன்ஸ் மோடில் இருக்கிறார்கள்.
இவர்களின் ஊதியம் குறைந்தால்தான் , அறிவித்தால்தான் தயாரிப்புச்செலவு பெருமளவு குறைகிற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் வாயைத் திறப்பதாக இல்லை. அதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது .அவர்களில் சிலர் சொந்தமாகப் படம் எடுத்து கடன் சுமையில் விழி பிதுங்கி நிற்கிறவர்கள். அவர்களால் ஊதியக்குறைப்புப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கடன் வாங்கியவர்கள் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட உண்மைக்கதைகள் கோலிவுட்டில் நிறையவே உண்டு.
உதாரணமாக சிரிப்பு நடிகர் மனோபாலாவை எடுத்துக்கொள்ளலாம். இரண்டு படங்களை தயாரித்த மனோபாலா அந்தப் படங்களை வெளியிட முடியாமல் தண்ணீருக்குள் அழுது கொண்டிருக்கிறார். மாதம் ஒன்றுக்கு பல லட்சங்கள் வட்டியாக கட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.இவரைப்போல பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களால் எப்படி ஊதியக்குறைப்பு செய்ய முடியும்?
திரை உலகப்பிரபலங்கள் எல்லோரும் கூடி அமர்ந்து பேசினால் தவிர இந்தப் பிரச்னை தீரப் போவதில்லை.!












