
பிக்பாஸ் முடிந்தது.! எதிர்பார்த்தபடியே ஆரி அர்ஜூன் வெற்றியை அணைத்துக்கொண்டார்.
ஆறுதல் பரிசாக இரண்டாவது இடம் பாலாவுக்கு.!
தொடக்கத்தில் இருந்தே ஆரியை கதையின் நாயகன் அளவுக்கு சித்தரித்து வந்தார்கள். அதைப்போலவே வில்லன் வீரப்பா அளவுக்கு பாலாவை கொண்டு சென்றார்கள்.
ரம்யா பாண்டியன் எப்பவோ விடை பெற்று சென்று இருக்க வேண்டும் ,ஆனால் வலிய அவரை இழுத்துக்கொண்டு கடைசி வரை சென்று கவிழ்த்திருக்கிறார்கள்.
சோமசேகர் அழகான மனிதர்.மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்தவராம்.பண்போடு கடைசி வரை ஸ்கிரிப்ட் படி நடந்து கொண்டிருக்கிறார்.
பைனலுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் மனிதர்.
ஆனால் தற்போது அதுவல்ல சேதி !
ரம்யாவுக்கும் சோமசேகருக்கும் இடையில் காதல் அரும்பியிருக்கிறது.
செடிகளுக்கு பலர் தண்ணீர் ஊற்றாத நிலையில் ரம்யா மட்டுமே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறார்,கூடவே காதல் செடிக்கும்.!
ஆனால் இவர்களது காதல் இரகசியம் காக்கப்பட்டிருக்கிறது.
ஜஸ்ட் இருவரும் ஒருவரையொருவர் கண்ணால் பார்த்துக்கொண்டதில் கூட காதல் தெரியவில்லை.
ஆனால் பிக்பாஸ் முடிந்த மறுநாளே இவர்கள் காதலிக்கிறார்கள் என்கிற செய்தி வெளி வரத்தொடங்கிவிட்டது.
ரம்யாவின் தம்பி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது அங்கிருந்த போட்டியாளர்களை “ஃப்ரண்ட்ஸ் ” என்றே அழைத்துப்பழகினார் .ஆனால் சோமசேகரை மட்டும் “மச்சான்ஸ்” என்று அழைத்தார் என்பதை கவனித்து சோமசேகரின் ரசிகர்கள் டிவிட்டரில் நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.
அந்த மச்சான்ஸ் எபிசோடு பரபரப்பாக பரவிக்கொண்டிருக்கிறது.
உண்மையானால் மகிழ்ச்சியே!












