சென்டர் சீட் சினிமாஸ் (Center Seat Cinemas) நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் முற்றிலும் மாறுபட்ட வாழ்வியல் எதார்த்தங்களுடன் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வன மடி’. ‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’ மற்றும் ‘புகைப்படம்’ போன்ற பல அழகிய மற்றும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார். அசுர வேகத்தில் மாறி வரும் தற்காலிகக் கால மாற்றங்கள், நம்மை மட்டுமன்றி நமது அடுத்தடுத்த சந்ததிகளையும் அறியாமலேயே ஒரு வலிமையான வாழ்க்கைச் சுழிக்குள் இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருப்பதை இக்கதை விவரிக்கிறது.
இயல்பான எளிய மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான அன்பும், வாழ்வியல் தேடுதல்களும் இன்றைய இயந்திரகதியான நவீன உலகிற்குள் எப்படி மெல்லத் தொலைந்து போய்விடுகின்றன என்பதைத் தனது எளிய மற்றும் ஆழமான காட்சி மொழியில் இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங் ‘வன மடி’ படத்தின் மையக்கருவாகச் செதுக்கியுள்ளார். முற்றிலும் புதிய முகங்கள் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதுடன், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் அவரே இப்படத்திற்குத் தனது அசாத்திய கேமரா மூலம் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
இப்படத்திற்கு அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல இசையமைப்பாளர் ராலே ராஜன் இசையமைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்துகொண்டே நமது உன்னதமான தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றை நவீன இசை வடிவமாக மாற்றும் அரிய பணியைத் தொடர்ந்து செய்து வரும் இவரது இசையில், புகழ்பெற்ற பின்னணிப் பாடகி மால்குடி சுபா ஒரு துள்ளலான பாடலைப் பாடியுள்ளார். அதேபோல சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் உணர்ச்சிப்பூர்வமான “ஆரிராரோ ஆரிரோ” பாடலைப் பாடிப் புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றியாளர் கிரிஷாங் இப்படத்திலும் ஒரு முக்கியப் பாடலைப் பாடியுள்ளார். ரமேஷ் வைத்யா பாடல்களை எழுத, ‘லால் சலாம்’ படப்புகழ் பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார்.












