
தென்னிந்திய திரையுலகின் இசைஅமைப்பாளர்களில் , ஒருவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.
இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தியும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.
தனது யூ ஒன் ரிக்கார்ட்ஸ் இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா.












