
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் திரிஷ்யம். இதில், மோகன் லால், மீனா, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம்,தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது .
இதையடுத்து இந்தப் படத்தின் தொடர்ச்சியாக திரிஷ்யம் 2 படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். இப்படமும் கேரள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திரிஷ்யம் 2 படத்தையும் ரீமேக் செய்ய பல்வேறு மொழிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்கையும் தயாரிக்கிறது. ஆனால்,இயக்குனர் ஸ்ரீபிரியாவுக்கு பதில் ஜீத்து ஜோசப் இயக்க,வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் ஐஜி கதாபாத்திரம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார். இந்நிலையில், தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












