
மற்ற கட்சிகள் என்ன நினைக்கின்றன என்பது இன்னும் தெரியவில்லை.
மத்திய அரசின் அமைச்சரவை மாற்றத்தில் தமிழகத்துக்கு ஒரு பதவி வழங்கப்படவிருக்கிறது.
கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு கிடைக்கலாம் என ஓ.பி.எஸ்.தரப்பினர் எதிர்பார்த்த நிலையில் குறிப்பாக தன்னுடைய மகனுக்கு கிடைக்கலாம் என்று வெகு நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் நினைத்திருந்தார்.
ஆனால் அந்த பதவி தமிழக பிஜேபி தலைவர் எல் .முருகனுக்கு போய் சேர்ந்திருக்கிறது.
அண்மையில் நடந்த சட்டப்பேரவைத்த தேர்தலில் போட்டியிட்டு முருகன் தோற்றவர் என்றாலும் அதை பற்றி கவலையில்லாமல் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த பதவி வழங்கல் பற்றி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய கவலையை பதிவு செய்திருக்கிறார். அதுவும் ஆணித்தரமாக கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
“தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்.
ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? ” என்று கேட்டிருக்கிறார்.












