
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று உலகநாயகன் கமல் பாடிய பாட்டு வேறு யாருக்குப் பொருந்துதோ இல்லையோ ,விக்னேஷ் சிவன் ,நயன்தாராவுக்கு பொருந்திப்போகிறது.
ஆண்டவன் கட்டளை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் மூலம் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன் தாரா & விக்னேஷ் சிவன் இருவரும் குஜராத் மொழியில் தயாரிப்பாளர்களாக தங்கள் பயணத்தை துவங்குகிறார்கள்.காந்தி பூமியில் காதலர்கள் கால் பதித்திருக்கிறார்கள். பெயர் சுப்யாத்ரா
காந்தியடிகளின் பூமியாக இருந்தாலும் மோடியின் ஆக்கிரமிப்பில் தற்போது இருக்கிறது.
இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இத்திரைப்படத்தை குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் மனிஷ் சைனி இயக்குகிறார்.
தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இப்படம் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி என்றும், மேலும் குஜராத்தி திரையுலகில் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இத்தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு திரைப்படமான ‘ராக்கி’ அதன் மாறுபட்ட அழுத்தமான கதை சொல்லலுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் ஆகியோர் நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் பரபர திகில் படமான ‘கனெக்ட்’, மற்றும் சூரரைப் போற்று புகழ் கிருஷ்ண குமார், பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி, பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” என்ற ரோம்-காம் திரைப்படமும் தயாரிப்பில் உள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஊர்குருவி’ படமும் பரபரப்பாக உருவாகி வருகிறது.












