
தமிழுக்கு டைம் ட்ராவலிங் படங்கள் புதிதல்ல என்றாலும் ‘கணம் ‘படத்தில் இடம் பெற்றுள்ள தாய்ப்பாசம் நம்மை ஈர்த்துக்கொள்கிறது.
உண்மையிலேயே கடந்த காலத்துக்குள் செல்கிற ஆசை நமக்கு அதிகமாகவே உண்டு. அது சாத்தியமில்லை என்பதால் கனவுகளில் கண்டு அனுபவிக்கிறோம்.
இந்த திரைப்படத்தில் கால எந்திரத்துடன் வருகிற ஒருவர் நம்மிடமும் “நீ கடந்த காலத்துக்குள் செல்ல விரும்புகிறாயா ?”என்று கேட்கக்கூடாதா என்கிற தவிப்புடன்தான் கதைக்குள் கரைந்து விடுகிறோம்.
இசைக்கலைஞர் ஆதி (ஷர்வானந்த்). வீட்டு ப்ரோக்கர் பாண்டி (ரமேஷ் திலக்). திருமணத்துக்கு தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருப்பவர் கதிர் (சதீஷ்). இந்த மூவரும் பள்ளிபருவத்திலிருந்தே ஒன்றாக வாழ்கிறவர்கள். நல்ல நண்பர்கள்.இவர்களுக்கு பலவித ஆசைகள் ,தேவைகள்.!
காலம் கடக்கும் எந்திரத்துடன் வந்தவர் ,” நீங்கள் கடந்த காலத்துக்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் உதவி செய்கிறேன் “என்கிறார்.
அவரது கண்டிஷனுக்கு கட்டுப்பட்டு கால எந்திரத்தின் உதவியுடன் கடந்த காலத்துக்குள் புகுந்தவர்களால் நிகழ் காலத்துக்கு திரும்ப முடிகிறதா ,விளைவுகள் என்ன என்பதுதான் ‘கணம்’படத்தின் கதை.
இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் பார்வையாளர்களை வசியப்படுத்திவிடுகிறார் என்பதுதான் உண்மை.
98 காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு, நன்றாகவே கனெக்ட் ஆகிறது. நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் இன்னமும் மனதுக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை காட்சிகளால் உணருகிறோம்.நல்ல அனுபவம். சொல்லப்படுகிற காட் சிகள், எதையுமே நகலெடுக்காத அசல்கள் என்பதால் ஒன்றிவிடுகிறோம் என்பது உண்மை.
தாய்க்கும் – மகனுக்கும் இடையிலான பாசம் , ‘ஒருமுறை என்ன பாரம்மா’ பாடல் வழியாக ரத்த நாளங்களில் அலை அடிக்கிறது..
அம்மா கதாபாத்திரத்தில் அமலா அக்கினேனி. 30 ஆண்டுகளுக்கு பிறகு கேமராவுக்கு முகம் காட்டியிருக்கிறார். நெடிய இடைவெளியினால் வந்து விட்ட தடுமாற்றங்கள் தெரிகின்றன.. ஷர்வானந்தின் முகம் இயல்பாகவே இழப்பின் வலியினை உணர்த்திவிடும். கவனம் பெறுகிறார்.
ரமேஷ் திலக் . சதிஷ் இருவருமே வழக்கமான தங்களின் பாணியிலிருந்து வெளியேறி விருந்து வைக்காத குறையாக கவர்ந்து விடுகிறார்கள். ரித்து வர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் குற்றம் காண முடியாத அளவுக்கு கதையில் இணைந்து இருக்கிறார்கள்.
“என்னடா உலகம் “என்பதை நாம் வாழ்கிற நிமிடங்களின் அவசியத்தை படம் பார்க்கிறபோதே உணர்ந்து விடுகிறோம். நமக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.காலம் தேடி கடந்து பயனில்லை .அன்றைய தேவையை அக்கணமே அறிந்து கொண்டாடிவிடு என்கிறது கதை.
சர்வானந்த் போலவே அமைதியாக சில இடங்களில் கதை நகர்கிறது. சென்டிமென்ட் என சொல்லி அளவு மீறுகின்ற காட்சிகள்.
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை, சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவு கால வெளியின் மாற்றங்களை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறது.
டைம் டிராவலிங் கதை வழியாக வாழ்க்கையின் தத்துவத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.












