தமிழகம், புதுவையில் ஒரே நாளில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சியினர், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் வென்றது. இந்த வெற்றியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள திமுக கூட்டணி பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. திமுகவின் இந்த முயற்சியை முறியடிக்க பாஜகவும் அதிமுகவும் கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அறிவிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. அது போல் 100 சதவீத வாக்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வருகின்றன. அது போல் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தும் நோக்கில் அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு திரையரங்கு தியேட்டர் உரிமையாளர்களும் 19ஆம் தேதி அன்று காலை, மதியம் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,” எதிர் வரும் 19. 04. 2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












