எஸ். எஸ். லலித் குமார் மற்றும் நயன்தாரா தயாரித்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இதில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், மிஷ்கின், சீமான், ஆனந்த் ராஜ், சுனில் ரெட்டி, சா ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் கதை, ‘2040’ ஆண்டில் நடைபெறுவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. காதல் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்த எஸ். ஜே. சூர்யா, அதன் விளைவாக, நீண்டகால ஆராய்ச்சிக்குப்பிறகு ‘LIK’ என்ற செயலியை உருவாக்குகிறார். அந்த செயலியை பயன்படுத்துபவர்களுடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதுடன், அந்த செயலி காதலிப்பவர்களுடைய தரவுகளின் பகுப்பாய்வு செய்து காதலை நிர்ணயம் செய்கிறது. இப்படி தொழில்நுட்பத்தில் உச்சம் பெற்ற இது ஒரு உலகம்.
அதற்கு நேர்மாறாக, தொழில்நுட்பங்களின் ஆக்கிரமிப்பின்றி இயற்கையோடு இயைந்து வாழ்வதே சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கை. என கூறி அதன்படி ஒரு உலகத்தில் வாழ்ந்து வருகிறார், சீமானும் அவரது மகனுமான பிரதீப் ரங்கநாதனும்.
இந்நிலையில், மொபைல் போன் மூலமாக குழந்தையிலிருந்து வளர்க்கப்பட்ட கிருத்தி ஷெட்டிக்கும், மொபைல் போனே பார்த்திராத பிரதீப் ரங்கநாதனுக்கும் காதல் உருவாகிறது. ஆனால், LIK செயலி இருவருக்குமிடையே பொருத்தமில்லை என கூறுவதால், கிருத்தி ஷெட்டி அந்தக்காதலை பிரேக்கப் செய்ய முடிவு செய்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பிரதீப் ரங்கநாதன் செயலி தவறாக முடிவு செய்கிறது எனவும், அந்த செயலியால் மனிதர்களின் உணர்வுகளை கணிக்க முடியாது எனக்கூறுவதுடன், அதை நிரூபிக்க அவர் எடுக்கும் முயற்சியே படத்தின் க்ளைமாக்ஸ்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இதற்கு முன்னர் வெளிவந்தப் படங்களைப் போலவே இந்தப் படமும் அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும்படியாகவே அமைந்திருக்கிறது. ஒற்றை மனிதராக முழு படத்தையும் கலகலப்பாக கொண்டு செல்கிறார், அவரை, இந்தக் காலத்து விடலைகளுக்கு ஏற்றபடி வடிவமைத்திருக்கிறார், இயக்குநர் விக்னேஷ் சிவன்.
கிருத்தி ஷெட்டி, வழக்கமான கிளாமர் காட்டி ரசிகர்களை வசியம் செய்கிறார்.
படத்தின் மற்றொரு பலமாக, எஸ். ஜே. சூர்யா. ரோபோக்களின் புடை சூழ, வில்லனாக வலம் வருகிறார். திரைக்கதையை சோர்வில்லாமல் நகர்த்திச்செல்கிறார். ‘மயிலிறகே.. மயிலிறகே’ பாடலுக்கு அவர் ஆடும் நடத்தின் போது, விசிலடித்து ஆரவாரம் செய்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சீமான் இடம்பெறும் காட்சிகளில் சில கைதட்டல்களை பெறுகிறது.
ரவி வர்மனின் ஒளிப்பதிவில், கலர்ஃபுல்லாக கவர்ந்திழுக்கிறது ஒவ்வொரு காட்சியும்.
அனிருத்தின் இசை இளைஞர்களை கவரும் வகையிலும், பாடல்கள் தாளம் போட வைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன், இன்றைய இளைஞர்களை குறிவைத்து ‘LIK’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
‘LIK’ – பார்க்கலாம்!












