பலகோடி முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களின் லாப, நஷ்டத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வரும் தமிழ் நடிகர்களை கண்டித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், ‘ ‘மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர்கள், இனிவரும் காலங்களில் வருவாய் பகிர்வு முறையில் நடிக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் நடிகர்கள் பங்கேற்க வேண்டும் என்று, கடந்த 3 வருடங்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நேரிலும், கடிதத்திலும், பத்திரிகைகளிலும் பலமுறை தெரிவித்ததாகவும், நடிகர் சங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து தென்னிந்திய நடிகர்கள் சங்கம் , தங்களை சுமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலேயே தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டதாக கண்டனம் தெரிவித்தது.மேலும், தங்களிடம் ஆலோசனை நடத்தாமல் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும், தேர்தல் முடிவுக்கு பின்னர் இது குறித்து பேச்சு வார்த்தையை மேற்கொள்ளலாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்க, தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி இன்று தயாரிப்பாளர் சங்கத்தினர் பெப்சி அமைப்பின் ஆதரவோடு வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடக்க இருந்த 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 7,500 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எடிட்டிங் ,டப்பிங், இசையமைப்பு போன்ற பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.












