தமிழ் திரையுலகில் உணர்வுபூர்வமான மற்றும் அழுத்தமான திரைப்படங்களை வழங்கி ரசிகர்களின் இதயங்களை வென்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி, மாபெரும் வெற்றிபெற்ற ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ள புதிய படைப்பு ‘நூறு சாமி’. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தாய்மை, வாழ்க்கையின் இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவுக்கு இடையே இருக்கும் பிரிக்க முடியாத உன்னதமான பிணைப்பை ஆழமாக ஆராயும் இந்த மனதைத் தொடும் குடும்ப நாடகத் திரைப்படம், தற்போது டிஜிட்டல் திரையில் தடம் பதிக்கத் தயாராகிவிட்டது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்ற இத்திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் முன்னணி ஓடிடி தளமான ZEE5 (ஜீ5)-ல் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாகப் படக்குழுவினர் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், ஓடிடி ரசிகர்களின் வசதிக்காகத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் எனத் தென்னிந்தியாவின் முக்கிய நான்கு மொழிகளில் பிரத்தியேகமாக வெளியாகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், முன்னணி இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்ட பல திறமையான நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘நூறு சாமி’ திரைப்படத்தின் மிக முக்கிய பலமே அதன் ஆழமான மற்றும் புரட்சிகரமான மையக்கதைதான். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு செதுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பிள்ளைகளையும் வளர்ப்பதற்காகவே தனது ஒட்டுமொத்த வாழ்நாளையும் தியாகம் செய்த ‘செல்வி’ என்ற ஒரு ஏழை விதவைத் தாயைப் பற்றியதாகும். தனது கடமைகளை முடித்து, வாழ்க்கையின் பிற்காலத்தில் தனக்கென ஒரு துணையைத் தேட அவர் முடிவு செய்யும்போது, ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்தச் சமூகத்தின் பிற்போக்குத்தனமான நெறிமுறைகளையும், சுற்றியிருப்பவர்களின் கடுமையான எதிர்ப்புகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இத்தகைய சவால்களைச் சந்திக்கும் செல்வியின் எதார்த்தமான வாழ்க்கையின் மூலம், தாய்மை என்பதன் உண்மையான அர்த்தம், ஒரு பெண்ணின் கண்ணியம் மற்றும் சமூகத்தின் தேவையற்ற தீர்ப்புகளை மீறித் தனது சொந்த மகிழ்ச்சியைத் தழுவிக்கொள்ளும் ஒரு தாயின் அசாத்திய துணிச்சலையும் இப்படம் மிகவும் மனதை நெகிழ வைக்கும் வகையில் பேசுகிறது.
திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் சசி பேசுகையில்,
இந்தத் திரைப்படம் என்பது வெறும் கற்பனையல்ல, உண்மையான உணர்வுகளிலிருந்தும், நிஜ மனிதர்களின் வாழ்க்கைகளிலிருந்தும் பிறந்த ஒரு ஆழமான கதை என்று குறிப்பிட்டார். வயது அல்லது சமூக எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும், அதற்கு அப்பாற்பட்டு அன்பு, கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் தங்களுக்குப் பிடித்த மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் ஒரு முக்கியமான கதையைச் சொல்ல வேண்டும் என்று தான் விரும்பியதாகத் தெரிவித்தார். திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ரசிகர்களுடன் இணைந்ததற்குத் தான் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், இப்போது ZEE5 ஓடிடி தளம் மூலம் இன்னும் பல லட்சக்கணக்கான வீடுகளுக்கு இந்தத் திரைப்படம் நேரடியாகச் செல்லவிருப்பது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நெகிழ்ந்தார்.
அடுத்ததாக விஜய் ஆண்டனி பேசுகையில்,
சினிமாவில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு தனித்துவமான நோக்கம் இருக்கிறது என்று கூறினார். ஆனால், இந்த ‘நூறு சாமி’ திரைப்படம் அதில் இருக்கும் ஆழமான வாழ்வியல் உணர்வுகளால் தமக்கு எப்போதும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானதாகவும் விசேஷமானதாகவும் தெரிகிறது என்றார். இந்தக் கதையின் மையத்தில் அமைந்திருக்கும் தாய் மற்றும் மகனின் உன்னதமான உறவும், அதன் மூலம் சொல்லப்படும் புரட்சிகரமான செய்தியும் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களோடு ஆழமாக இணையும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
தற்போது தென்னிந்திய மொழிகளில் உள்ள குடும்பங்கள் இந்தத் திரைப்படத்தை தங்களது இல்லங்களிலிருந்தே ஒன்றாக அமர்ந்து ZEE5 ஓடிடி தளம் வழியாகப் பார்க்க முடிவது தமக்கு பெரும் திருப்தியைத் தருகிறது என்றார்.
உணர்ச்சிகரமான காட்சிகள் நிறைந்த இந்த ‘நூறு சாமி’ திரைப்படத்தை ஆகஸ்ட் 7 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில், ZEE5 ஓடிடி தளத்தில் பிரத்தியேகமாகக் காணத் தவறாதீர்கள்.












