‘கட்டா குஸ்தி 2’ படத்தைத் தொடர்ந்து,நடிகர் விஷ்ணு விஷால்,அடுத்ததாக ‘கனா’ பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை அருண்ராஜா காமராஜுடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் இருவருக்கும் இடையே இப்படத்தின் தயாரிப்பு மற்றும் திரைக்கதை தொடர்பாக சில ஏற்பட்ட கருத்து மோதல்களால் இப்படம் கைவிடப்பட்டு விட்ட தாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த 10 மாதங்களாக படத்துக்காக தீவிரமாக தயாராகியும் வந்தேன். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இந்தப் படத்தினை தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. படத்தை தொடங்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்.ஆனால், சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடு மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல் ஏற்பட்டது.இந்த படத்தை சாத்தியமாக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். எவ்வளவு முயற்சி செய்தும் இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவாக அமையவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும் இந்தப் படத்தில் இருந்து இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள், நடைமுறைகள் அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும்.தற்போது என் கவனம் எனது அடுத்த வெளியீடான ‘இரண்டு வானம்’ படம் மீதும், எனது சகோதரரின் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி பெலோ’ படத்தின் மீதும்தான் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்












