ஏகே ஃபிலிம் ஃபேக்டரி (AK Film Factory) நிறுவனத்தின் சார்பில் அருண்குமார் தனசேகரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் காயடு லோஹர் கூட்டணியில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி த்ரில்லர் (Fantasy Thriller) பாணியில் உருவாகியுள்ள “இம்மார்டல்” (Immortal) திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா (Pre-Release Event) சென்னையில் மிக உற்சாகமாக நடைபெற்றது.
திரையுலகில் முற்றிலும் புதியதொரு கற்பனை உலகில், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடித் திருப்பங்களுடன் கூடிய காட்சி அமைப்புகளுடன் தயாராகியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர், முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கியச் சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த பிரம்மாண்ட விழாவில் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் படத்தின் அசாத்திய ஆக்கப் பணிகள் குறித்துப் பேசிய அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா,
“இத்திரைப்படத்தின் கதையைத் காகிதத்தில் உருவாக்கியதில் இருந்து அதனைத் திரையில் காட்சிப்படுத்துவது வரை நாங்கள் ஏராளமான சவால்களையும் தொழில்முறை நெருக்கடிகளையும் சந்தித்தோம். இது வழக்கமாக வரக்கூடிய கமர்சியல் திரைப்படம் அல்ல என்பதால், திரையரங்குகளில் ரசிகர்களை பிரமிக்க வைக்க ஒவ்வொரு காட்சியையும் முற்றிலும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது.
முற்றிலும் ஒரு புதுமையான கற்பனைக் கதையின் மீது அதீத நம்பிக்கை வைத்து, ஒரு படைப்பாளியாக எனக்கு முழு சுதந்திரத்தையும், எல்லையற்ற ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இக்கதையை முதன்முதலில் விவரித்தபோதே, அதன் புதுமையை உணர்ந்து என் மீது முழு நம்பிக்கை வைத்து உடனடியாக இப்படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ் சாருக்கு என் வாழ்த்துகள்.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் திரையில் மேலும் சிறப்பாகக் கொண்டு வருவதற்காகத் தந்து அசாத்திய கேமரா கோணங்களால் அதிகம் யோசித்து உழைத்துள்ளார். எடிட்டர் சான் லோகேஷ் மற்றும் படத்தொகுப்பில் பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகிய இருவருமே இப்படத்தின் விறுவிறுப்பான காட்சி உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இப்படத்தின் நாயகி காயடு லோஹர், தனது கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவருக்குத் தமிழ் மொழியில் ஒரு வார்த்தைகூடத் தெரியாத இக்கட்டான நிலையிலும், ஒவ்வொரு வசனத்தின் அசல் பொருளையும் ஆழமாகப் புரிந்துகொண்டு, திரையில் அதனைச் சரியாகப் பேசுவதற்காக மொழி உச்சரிப்பில் மிகக் கடுமையாக உழைத்தார்.
கடினமான மற்றும் சவாலான பல்வேறு படப்பிடிப்புச் சூழல்களிலும் நாயகன் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் முழு அர்ப்பணிப்புடன் களத்தில் நின்றனர். குறிப்பாக, இப்படத்தில் வரக்கூடிய அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், மிரட்டலான கிளைமாக்ஸ் காட்சிகளும் (Climax) மிகுந்த சிரமங்களுக்கும் ஆபத்துகளுக்கும் மத்தியில் படமாக்கப்பட்டன.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., இப்படத்தின் ஒலி வடிவமைப்புப் (Sound Design) பிரிவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் ‘இம்மார்டல்’ திரைப்படத்திற்காகத் தங்களின் ஆகச்சிறந்த பங்களிப்பை முழுமையாகக் கொடுத்துள்ளனர்.
இத்திரைப்படம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதியதொரு சினிமா அனுபவத்தை அள்ளிக் கொடுக்கும். இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் அதிகம் பார்த்திராத வகையிலான பிரம்மாண்ட விஷுவல் மற்றும் மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸை உருவாக்க நாங்கள் தீவிரமாக முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, இதில் உழைத்துள்ள ஒவ்வொரு கலைஞரின் வியர்வையும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
முன்னதாகப் பேசிய நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார்,
“இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான வாம்பயர் (Vampire) மற்றும் மான்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய காட்சி அனுபவத்தை அள்ளிக் கொடுக்கும். இத்திரைப்படத்திற்காகப் படக்குழுவினர் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாகக் கடுமையான உழைப்பைச் செலுத்தி, பிரம்மாண்டமான விசுவல் எஃபெக்ட்ஸ் (CG) காட்சிகளை உருவாக்கியுள்ளனர். இது பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு அக்மார்க் சர்வைவல் த்ரில்லராகவும் இருக்கும். குறிப்பாக, சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு அமானுஷ்யமான கதாபாத்திரத்தைச் சுற்றியே இத்திரைப்படத்தின் முழுமையான கதைக்களம் நகர்கிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த ‘இம்மார்டல்’ திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கிற்குச் சென்று பார்த்து ரசிக்கலாம்” என்று குறிப்பிட்டார்.












