‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படத்தை, இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ.சமய முரளி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் அவரே எழுதியுள்ளதோடு, பிண்ணனி இசையும் அமைத்துள்ளார்.
இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தாமரை’ பாடல் 2 மில்லியன் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘தங்கம் தங்கம்’ பாடலும் 1 மில்லியன் பார்வைகளை கடந்து பாராட்டுகளை குவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 30 அன்று தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, டீசர் அக்டோபர் 14 அன்றும், டிரைலர் அக்டோபர் 19 அன்றும் வெளியாகிறது.
ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், கடத்தல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் மறுபக்கம் குறித்து விறுவிறுப்பாக பேசுகிறது.

2008-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (IRS) அலுவலர்கள் பிரிவைச் சேர்ந்த தோ.சமய முரளி, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறைகளில் நீண்ட காலமாகப் பணியாற்றியுள்ளார். என்.ஐ.டி. திருச்சிராப்பள்ளியில் பொறியியல் படித்த அவர், சிறப்பான பணிக்காக 2021-ம் ஆண்டு உலக சுங்க அமைப்பு (World Customs Organization) வழங்கிய உயரிய விருதைப் பெற்றுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் தோ. சமய முரளி கூறுகையில், “‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை ஆகும். கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரசியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு வேலையில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் நோக்கம். இது வரை படத்தை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ரசிகர்களும் இந்த திரைபப்டத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தோ.சமய முரளி, எழுத்தாளர், ஆய்வாளர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ‘சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ்’, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, ‘காக்கி’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள அவர் எழுதிய சுங்கத்துறை தொடர்பான இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் World Customs Journal-ல் வெளியாகியுள்ளன. அவர் இயக்கிய முதல் குறும்படமான ‘புதிய பார்வை’, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் ‘சைலன்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்ததுடன், அதற்கு இசையும் அமைத்துள்ளார்.
எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரித்துள்ள ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் யதார்த்தம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாட்டிற்காக பணியாற்றும் சுங்கத்துறையின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியுள்ளது.
***












