‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா (வயது 75) குடும்பத்தினருடன் தி நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் இந்நிலையில் இன்று காலை ‘திடீர்’ மாரடைப்பு காரணமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் 9 00 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,திரையுலகினர் பலரும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.7
5 வயதை கடந்த தேவா வரும் நவம்பர் 20ம் தேதி தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவர் மறைந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது உடல் அவரது சொந்த ஊரான ஆற்காட்டில் அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தேவாவின் மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவாசெய்தியாளர்களிடம் கூறு கையில், , ‛‛என்னால் பேச முடியவில்லை. திடீரென அப்பா எங்களை விட்டு போய்விட்டார். அப்பாவிற்கு கார்டியாக் அரஸ்ட். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். இருந்தாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவிற்கு அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்கு நடக்கும் என அறிவித்துள்ளனர். அதற்காக என் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் இறுதிச்சடங்கு நடக்கிறது. நாளை(அக்., 18) ஒரு மணிக்கு சென்னை திநகர் வீட்டிலிருந்து அவர் உடல் சொந்த ஊரான ஆற்காடு புறப்படுகிறது. மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது” என்றார்.முதல்வர் விஜய், தி நகரில் உள்ள தேவாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மறைவுச் செய்தி வெளியானதுமே சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நடிகர் ரஜினி காந்த் அஞ்சலி செலுத்தினார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“எனது அருமை நண்பர் தேவாவின் மறைவு அதிர்ச்சியையும் வேதைனையும் அளிக்கிறது. அவர் எனது அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் படங்களுக்கு இசையமைத்தார். அம்மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றிபெற்றன.” என்று அதில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.]
தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள் ளதாவது,”உற்சாகமும் துறுதுறுப்பும், சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும். ” என்று கமல் தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது அவரது எக்ஸ் தள பதிவில், ” தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.












